கொல்லப்பட்ட அல்லது காணாமல்போன ஊடகவியலாளர்கள் குறித்து விசாரணை
வடக்கு கிழக்கு உள்ளிட்ட நாட்டின் அனைத்து பகுதிகளிலும் கடந்த காலங்களில் கொல்லப்பட்ட அல்லது காணாமல்போன 41 ஊடகவியலாளர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு வடபகுதி ஊடகவியலாளர்கள் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வடக்கு தெற்கு ஊடகவியலாளர்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் செயற்றிட்டத்தின் கீழ் வடபகுதியிலுள்ள ஊடகவியலாளர்கள் குழுவொன்று நேற்று வியாழக்கிழமை தென்பகுதி விஜயம் செய்துள்ளது.
இந்தக் குழுவினர் நேற்று நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக, பிரதி அமைச்சர் கருணாரட்ன பரணவித்தாரன ஆகியோரை சந்தித்து கலந்துரையாடிய போதே இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர் சுகிர்தராஜன், திருகோணமலையில் கொல்லப்பட்ட நடேசன் மற்றும் கொழும்பில் கொல்லப்பட்ட தராக்கி சிவராம் ஆகியோரின் படுகொலைகள் தொடர்பாக விசாரணைகள் முதலில் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அத்துடன் தகவலறியும் சட்டத்தை நிறைவேற்றியமைக்கும் வடபகுதி ஊடகவியலாளர்கள் நன்றிகளை தெரிவித்துள்ளனர்.
மேலம் ஊடகவியலாளர்களுக்கு தொழில் ரீதியான பாதுகாப்பையும் உறுதிப்பாட்டையும் வழங்குமாறு வலியுறுத்திய அவர்கள், ஆட்சி மாற்றத்தின் பின்னர் ஊடகவியலாளர் ப்ரெடி கமகே மீதான தாக்குதலிற்கும் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.








