Breaking News

சிங்களமயமானது நாயாறு கிராமம்: துரத்தப்படும் தமிழ் மக்கள்



நாயாறு கிராமத்தை முற்றுமுழுதாக சிங்களமயப்படுத்தும் நடவடிக்கைகள் பூர்த்தி யாகியுள்ளன. இந்நிலையில், அந்த கிராமத்திற்குள் நுழைவதற்கு தமிழ் மக்களும், கிராம சேவை அலுவலகர்களும் அனுமதிக்கப்படுவதில்லை என முல்லைத்தீவு மீனவ அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன.

முகத்துவாரம் கிராமத்தை தமிழ் மக்களிடமிருந்து கைப்பற்றி நாயாறு கிராமத்தை சிங்களமயப்படுத்தும் நடவடிக்கைகள் பூர்த்தியாகி, அங்கு 299 சிங்கள குடும்பங்களைக் குடியேற்றும் பணி தற்போது பூர்த்தியடைந்துள்ளது. அவர்கள் குறிப்பிட்ட கடலோரப் பகுதியில் தற்போது நிரந்தரமாக வாழத்தொடங்கியுள்ளதுடன், குறித்த பகுதி இராணுவ வலயமாகப் பேணப்படுகின்றது.

இந்நிலையில், தமிழர்களும் கிராம சேவகர்களும் இந்தப் பகுதிக்குள் நுழைவதற்கு முற்றாக அனுமதி மறுக்கப்படும் நிலை காணப்படுகின்றது என்று தமிழ் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ் மக்கள் தங்கள் பாரம்பரிய கிராமங்களிலிருந்து வெளியேற்றப்படுகின்றார்கள் என்பதை சுட்டிக்காட்டி சிங்கள குடியேற்றத்திற்கு தாங்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றபோதிலும் இலங்கை மீன்பிடித்துறை அமைச்சு சிங்கள மீனவர்களுக்கு அப்பகுதியில் மீன்பிடிப்பதற்கான அனுமதியை வழங்கிவருவதாக முல்லைத்தீவு மாவட்ட மீனவர் அமைப்புகள் தெரிவித்துள்ளன.