கொத்துகுண்டு பாவனை: குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர்- மங்கள உறுதி
கொத்துக்குண்டு உட்பட அனைத்து குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, நாட்டின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க முயற்சித்த வர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 32ஆவது கூட்டத்தொடரில் இலங்கை சார்பாக பங்குபற்றிய அமைச்சர் மங்கள் சமரவீர, கடந்த வெள்ளிக்கிழமை நாடு திரும்பினார். இந்நிலையில், ஐ.நா. கூட்டத்தொடர் தொடர்பில் விளக்கமளிக்கும் வகையில் நேற்று (வியாழக்கிழமை) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர், இலங்கையில் இடம்பெற்ற போரின்போது கொத்துக்குண்டுகள் பயன்படுத்ததாக நான் கருதவில்லை. ஆனால் அவ்வாறு பயன்படுத்தப்பட்டிருப்பின் அது அபாயகரமானதாகும்.
எனினும் கொத்துக்குண்டுகளின் பயன்பாடு தொடர்பாக மெக்ஸ்வெல் பரணகம வெளியிட்ட கருத்து தேவையற்ற ஒன்றாகும். அந்தக் கருத்தானது இராணுவம் கொத்துக்குண்டுகளைப் பயன்படுத்தியதான தோற்றப்பாட்டை ஏற்படுகின்றது.
இந்நிலையில், கொத்துக்குண்டு உட்பட அனைத்து குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் முறையான விசாரணை நடத்தப்படவேண்டும். அத்துடன் நாட்டின் நற்பெயருக்கு எவர் கலங்கம் விளைவித்திருந்தாலும் அவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும் என்று வலியுறுத்தினார்.
அதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் நாடு முழுவதும் பரப்பப்பட்ட இராணுவமயத்தை எதிர்வரும் 2018ஆம் ஆண்டுக்குள் நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
மேலும், போர்க்குற்ற விசாரணைகளில் சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்குகின்றமை உட்பட சர்வதேச வகிபாகம் தொடர்பான இறுதித்தீர்மானம் அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடிய பின்னரே எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.








