Breaking News

உதய கம்மன்பில பிணையில் விடுவிப்பு



முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

எனினும் அவரது கடவுச்சீட்டை பறிமுதல் செய்த நீதிமன்றம் வெளிநாடு செல்வதற்குத் தடை விதித்துள்ளது.

மோசடி குற்றச்சாட்டில் கடந்த யூன் மாதம் 16 ஆம் திகதி பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கம்மன்பில இன்று கொழும்பு கோட்டே நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதற்கமைய 25 ஆயிரம் ரூபா ரொக்கம் மற்றும் 5 இலட்சம் ரூபா பெறுமதியான 2 சரீரப் பிணைகளிலும் விடுவிக்கப்பட்டுள்ளார்.

உதய கம்மன்பிலவுடன் கைதுசெய்யப்பட்ட 2 ஆவது சந்தேக நபரான சிட்னி ஜயசிங்கவும், 15 ஆயிரம் ரூபா ரொக்கம் மற்றும் 5 இலட்சம் ரூபா பெறுமதியான 2 சரீரப் பிணைகளிலும் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கம்மன்பில உட்பட இருவருக்கும் வெளிநாடு செல்வதற்கு தடை விதித்துள்ள கொழும்பு நீதவான் லங்கா ஜயரத்ன, அவர்களின் கடவுச் சீட்டுக்களையும் நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளார். 

நடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இதுவரை இடம்பெற்ற வழக்குகளை தவிர்க்கவில்லை என்றும் அனைத்து விசாரணைகளுக்கும் ஒத்துழைத்துள்ளதாகவும் குறிப்பிட்ட நீதவான்,

தனக்கு எதிரான சாட்சிகளைக் குழப்புவதற்கு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்பதாலேயே பிணை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார். 

அவுஸ்திரேலிய வர்த்தகரான ப்ரயன் செடிக் என்பவருக்கு சொந்தமான 110 மில்லியன் ரூபா பெறுமதியான பங்குகளை, போலி பத்திரம் மூலம் உதய கம்மன்பில விற்பனை செய்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.