தமிழ் மக்களின் நியாயமான தீர்விற்காக போராடுவோம் : அநுரகுமார திஸாநாயக்க
தமிழ் மக்களுக்கான நியாயமான தீர்விற்காக போராடுவோம் என்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க நேற்று (வியாழக்கிழமை) யாழ்ப்பாணத்தில் வைத்து குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, யாழ் வணிகர் கழக தலைவர் மற்றும் உறுப்பினர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.
இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
‘இன்று இடம்பெற்ற சந்திப்பானது மிகவும் ஆரோக்கியமானதாக அமைந்திருந்தது. இதன்போது எமக்கு தமிழ் மக்களது பிரச்சினைகள் தொடர்பாக தெளிவுபடுத்தியிருந்தார்கள்.
குறிப்பாக காணிப் பிரச்சினை முகாம்களில் உள்ள மக்களது மீளக்குடியேற்ற பிரச்சினை, காணாமல் போனோர் தொடரபான பிரச்சினை, அரசியல் கைதிகள் தொடர்பான பிரச்சினை என்பன தொடர்பாக எமக்கு தெளிவுபடுத்தியிருந்தார்கள்.
இதுதொடர்பாக எமது கொள்கை நிலைப்பாட்டை நாம் தெளிவுபடுத்தியிருந்தோம்.
அந்தவகையில் எதிர்வரும் காலங்களில் தமிழ் மக்களுக்களுக்கான தீர்விற்காக போராட்டங்களையும் கருத்துக்களையும் முன்வைப்பதற்கும், உரிமைகளை வென்றெடுக்க கூடிய திசைகளை நோக்கியதான செயற்பாடுகளுக்கு பூரணமான ஒத்துழைப்பை நாம் வழங்குவோம்.
மக்கள் விடுதலை முன்னனி என்பது மக்களின் சமத்துவத்தை அடிப்படையாக கொண்ட ஒர் அரசியல் கட்சியாகும்.
இலங்கையின் கடந்த அறுபது வருடத்திற்கும் மேலான காலத்தை எடுத்து பார்க்கும் போது இந்ந ஆட்சி பீடம் ஏறிய அல்லது ஏறுவதற்கு எத்தனித்துக்கொண்டிருக்கின்ற யாராலும் மக்களுடைய பிரச்சனைகளை தீர்க்க முடியாத நிலைமையே காணப்படுகின்றது’ என்றும் கூறினார்.








