Breaking News

நிஷா பிஷ்வாலின் மூக்கு கண்ணாடியை கேட்கும் கம்மன்பில

இலங்கைக்கு விஜயம் செய்திருந்த அமெரிக்க பிரதிநிதி நிஷா பிஷ்வால் இலங்கையில் கண்டுள்ள பொருளாதார அபிவிருத்தியை நாமும் காணவேண்டும்.


அதற்கு நிஷா பிஷ்வாலின் மூக்கு கண்ணாடியை முதலில் பெற்றுக்கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளை இந்தியா தனதாக்கிகொள்ள திட்டமிட்டுள்ள நிலையில் ஏனையப்பகுதிகளை அமெரிக்கா தனதாக்கி கொள்ள முயற்சித்துள்ளது.

இந்நிலையிலேயே, இலங்கை தற்போது அமெரிக்காவின் தோட்டமாக மாறியுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர் அதன் கங்காணியாகவே ஜனாதிபதி செயற்படுவதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

கடந்த 20 மாதங்களில் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஷ்வால் இலங்கைக்கு 6 தடவைகள் விஜயம் மேற்கொண்டுள்ளார்.

நிஷா பிஷ்வால் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டமையானது உள்நாட்டில் மாப்பிள்ளை தேடுவதற்கு அல்ல.

இலங்கை பொருளாதார ரீதியில் பாரிய முன்னேற்றம் கண்டுள்ளதாக நிஷா பிஷ்வால் தெரிவித்துள்ளார். எனினும், அது எமக்கு ஆச்சரியமளிப்பதாக இருக்கின்றது.

அவர் கண்ட பொருளாதார அபிவிருத்தியை நாங்களும் காண வேண்டும். அதற்கு நிஷா பிஷ்வாலின் மூக்கு கண்ணாடியை முதலில் பெற்றுக்கொள்ள வேண்டும்.

எனவே, நிஷா பிஷ்வால் அடுத்து இலங்கை விஜயம் மேற்கொள்ளும் போது அவரின் மூக்கு கண்ணாடியை பெற்று போட்டு பார்க்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.