நாட்டை துண்டாடும் சமஷ்டியை ஒருபோதும் அனுமதியோம்
நாட்டைபிளவுபடுத்தும் சமஷ்டி முறையை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்றும், ஒற்றையாட்சியை ஏற்படுத்தவே இராணுவத்தினர் உயிரை தியாகம் செய்து போராடினர் என்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.
‘தாய்நாடு எமது’ என்ற அமைப்பு நேற்று (வியாழக்கிழமை) கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், அரசாங்கம் ஆட்சிக்கு வந்த நாள் முதல் யுத்தத்தை வெற்றிகொண்ட இராணுவத்தினரை காட்டிக்கொடுக்கும் செயலையே மேற்கொண்டு வருவதாகவும் குற்றம் சுமத்தினார்.
நாட்டில் ஒற்றையாட்சி இடம்பெறவேண்டும் என்பதற்காகவே இராணுவத்தினர் 30 வருடகாலம் போராடி யுத்தத்தை வெற்றிகொண்டதாகவும் சுட்டிக்காட்டினார்.
எனினும் நல்லாட்சி என்று கூறும் இந்த அரசாங்கம், சமஷ்டி முறையை கொண்டுவந்து தோட்டத் தொழிலாளர்களுக்கு மலையகத்தையும், வடக்கை, தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும். கிழக்கில் முஸ்லிம்களுக்கு தனி அலகு அமைப்பதற்கும் ஏற்றவாறு நாட்டை துண்டாட முயற்சிப்பதாக குற்றம் சுமத்தியதுடன், இதற்கு ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது என்றும் கூறினார்.








