தாண்டிக்குளத்தில் பொருளாதார மையம் அமையும் என்கிறார் மாவை
வடக்கு பொருளாதார மத்திய நிலையத்தை வவுனியா மாவட்டத்தின் தாண்டிக்குளத்திலா? அல்லது ஓமந்தையிலா? அமைப்பது என்பது தொடர்பில் எழுந்திருக்கும் சர்ச்சை தமிழ் மக்கள் மத்தியில் மிகுந்த விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 200 கோடி ரூபா செலவில் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் முன்னெடுக்கப்படவிருக்கும் இத்திட்டம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் ஆரம்பிக்கப்படாவிட்டால் அந்நிதி திரும்பிச் செல்லும் அபாயம் தோன்றியுள்ளது.
இதனைக் கருத்திற்கொண்டு தமிழ் தலைமைத்துவங்கள் தமக்கிடையேயான கருத்து முரண்பாடுகளைத்தவிர்த்து சாத்தியமான அளவு விரைவாக இத்திட்டத்தை முன்னெடுக்கவேண்டுமென தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மேலும், நீண்ட காலத்துக்குப் பின்னர் வட பகுதிக்கு 200 கோடி ரூபா செலவில் அமையவிருக்கும் பொருளாதார மத்திய நிலையத்தை உரிய முறையில் முன்னெடுக்காமல் தமிழ்த் தலைமைத்துவங்களுக்கிடையே ஏற்பட்டுள்ள ஏட்டிக்கு போட்டியான செயற்பாடுகள் தமிழ் மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளன.
இதேவேளை, 2010 ஆம் ஆண்டு வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் வட மாகாணத்திற்கான பொருளாதார மத்திய நிலையத்தை வவுனியாவில் அமைக்கும் தீர்மானம் எடுக்கப்பட்டது. இதனடிபப்டையில் ஓமந்தை பகுதியில் சோலைக்காடு என்ற இடத்தில் சுமார் 20 ஏக்கர் நிலம் இதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் பின்னர் ஓமந்தை பகுதியிலேயே ‘மாணிக்கவளவு’ என்ற இடத்தில் 13 ஏக்கர் நிலம் பார்க்கப்பட்ட நிலையிலும் ‘சோலைக்காடு’ என்ற இடத்தில் ஒதுக்கப்பட்ட 20 ஏக்கர் நிலமே இறுதியாக தீர்மானிக்கப்பட்டது.
அந்த இடத்திற்கு ஏ- 9 வீதியில் இருந்து மூன்று வழிகளால் செல்ல முடியும் என்பதனாலும் முன்னதாகவே உயர்கல்வி நிறுவனம் மற்றும் சர்வதேச விளையாட்டு மைதானம் ஆகியன இந்த பகுதியில் அமைக்கப்பட்டு வருகின்றமையினாலும் இந்நிலத்தை வனவள பாதுகாப்பு திணைக்களத்திடமிருந்து இலகுவாகப் பெற்றுக்கொள்ள முடியும் என்னும் அடிப்படையிலும் இந்த இடம் இறுதியாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனை வட மாகாண காணி ஆணையாளர் உறுதிப்படுத்தியுள்ளதுடன், மாகாண காணி ஆணையாளர் மற்றும் முதலமைச்சரின் செயலாளர் ஆகியோர் இணைந்து சென்று பார்வையிட்டும் உறுதிப்படுத்தியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, வட மாகாணத்துக்கான பொருளாதார மத்திய நிலையத்தை வவுனியா மாவட்டத்தில் தாண்டிகுளத்திலா? அல்லது ஓமந்தையிலா? அமைப்பது என்பது தொடர்பில் பெரும் சர்சசையை ஏற்படுத்த வேண்டிய அவசியமில்லை. இதற்கென ஒதுக்கப்படும் 200 கோடி ரூபாவை எக்காரணம் கொண்டும் திருப்பி அனுப்பிவிட முடியாது.
எனவே பொருத்தமான காணி ஓமந்தையிலோ அல்லது தாண்டிக்குளத்திலோ எங்கு கிடைக்குமோ அங்கு பொருளாதார மையத்தை அமைக்கலாம். இது குறித்து எமக்கிடையே ஓர் இணக்கமான கருத்தொருமைப்பாடு காணப்பட்டுள்ளது. இரு தினங்களில் இது தொடர்பான முடிவு எடுக்கப்படும் என தமிழரசுக் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா வீரகேசரி வார வெளியீட்டுக்குத் தெரிவித்தார்.
வடக்கு பொருளாதார மத்திய நிலையம் அமையும் இடத்தை நேரடியாக சென்று பார்க்கும் வகையில் நேற்றைய தினம் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, ஓமந்தை மற்றும் தாண்டிக்குளம் பகுதிகளுக்கு சென்று வந்தார். இது தொடர்பில் அவரிடம் வினவிய போது அவர் இவ்வாறு கூறனார்.
அவர் மேலும் கூறுகையில்,
வடமாகாணத்துக்கான பொருளாதார மையத்தை ஏ-9 வீதிக்கு அணித்தாக மக்கள் ஒன்று கூடும் பிரதேசத்தில் அமைக்க வேண்டும் என்பதே நகர அபிவிருத்தி அதிகார சபையின் விருப்பமாகும். இதற்கான காணியை தெரிவு செய்யும் பட்சத்தில் அவர்கள் அதனை பரிசீலித்து மேற்படி பொருளாதார மையத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பார்கள்.
இது தொடர்பில் நாம் கருத்து முரண்பாடு கொள்ளவேண்டிய அவசியமில்லை. ஓமந்தையில் காணி இல்லாத பட்சத்தில் தாண்டிக்குளத்தில் அமைக்கலாம். எக்காரணம் கொண்டும் எமது பிரதேசத்துக்கான வர்த்தக மேம்பாட்டை ஊக்குவிக்கும் இத்தகைய திட்டத்தை நாம் இழந்துவிட முடியாது. இது குறித்து வடக்கு முதலமைச்சருடன் நாளை (இன்று) பேசவுள்ளேன்.
இவ்விவகாரம் தொடர்பில் ஏற்பட்ட சிறிய முரண்பாடுகள் மிகவும் கவலையளிக்கும் வகையில் அமைந்துவிட்டன. மக்களின் அபிவிருத்தி தொடர்பில் நாம் ஒருமுகமான முடிவுகளை மேற்கொள்வது அவசியமாகும். அந்தவகையில் இவ்விகாரத்தை பெரிதுபடுத்த வேண்டிய அவசியமில்லை. குறித்த இவ்விகாரத்துக்கு சுமுகமான தீர்வு காணப்பட வேண்டியது அவசியமாகும். அதனை விட்டு வீண் முரண்பாடுகள் உருவாகுமானால் அது ஒட்டுமொத்தமாக எமது மக்களையே பாதிப்பதாக இருக்கும் என்று தெரிவித்தார்.
வட மாகாணத்துக்கான பொருளாதார மத்திய நிலையத்தை மாவட்டத்தின் தாண்டிக்குளத்திலா? ஓமந்தையிலா? அமைப்பது என்பது தொடர்பில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் வடக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் உள்ளிட்ட உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டிருந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் நடந்த விசேட கலந்துரையாடலில் தமிழ் கூட்டமைப்பின் வடக்கு மாகாண எம்.பிக்கள், வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் கலந்துகொண்டு தமது கருத்துக்களை முன்வைத்தனர்.
இதன்போது தாண்டிக்குள தரப்பும் ஓமந்தைத் தரப்பும் விட்டுக்கொடுக்காத நிலையில் நின்றதால் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களிடமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண எம்.பிக்களிடமும் கருத்து கணிப்பொன்றை நடத்துவதென்று இரா. சம்பந்தன் யோசனையொன்றை முன்வைத்தார். இதற்கமைய கூட்டம் நிறைவுற்றது.
இந்நிலையில், குறித்த இவ்விகாரத்துக்கு சுமுகமானதோர் தீர்வை தமிழ்த் தலைமைத்துவங்கள் காணமுடியாதிருப்பதாக கடுமையான விமர்சனங்கள் தமிழ் மக்கள் மத்தியில் எழுந்தமை குறிப்பிடத்தக்கது இந்நிலையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா நேற்றைய தினம் குறித்த பகுதிகளுக்கு நேரடி விஜயம் செய்திருந்தார்.
இதேவேளை, இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றம் தொடர்பான விசாரணையில் சர்வதேச நீதிபதிகளுக்கு இடமில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் பிரசுரமாகியுள்ளன. இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன? என அவரிடம் வினவியபோது,
மாவை சேனாதிராஜா எம்.பி பதிலளிக்கையில்,
நாங்கள் மீண்டும் மீண்டும் உறுதியுடன் கூறிக்கொண்டிருப்பது சர்வதேச பங்களிப்புடன் கூடிய விசாரணையொன்றையே ஆகும். ஐ.நா. மனித உரிமை பேரவையில் இலங்கைத் தரப்பின் உடன்பாட்டுடனேயே இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அது மாத்திரமன்றி ஐ.நா.வாய்மொழி மூல பிரேரணையிலும் மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹுசேன் இதனை வலியுறுத்தியுள்ளார். எனவே இலங்கை அரசாங்கம் சர்வதேசத்துக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டியது அதன் கடப்பாடாகும். எம்மைப் பொறுத்தமட்டில் எமது நிலைப்பாட்டில் நாம் உறுதியாகவே இருக்கின்றோம் என்றார்.
இதேவேளை, இலங்கையின் உள்நாட்டு நிர்வாகத்திலோ அல்லது நீதித்துறையின் செயற்பாடுகளிலோ வெளிநாட்டு நீதிபதிகளிலோ அல்லது சர்வதேச நீதித்துறை சார்ந்தவர்களோ தலையிடுவதற்கு நாம் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாணந்துறையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போது உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நீதித்துறையின் பங்களிப்பை ஜனாதிபதி நிராகரிக்கவில்லை என்ற தொனியில் வெளிவிகார அமைச்சர் மங்கள சமரவீர கடந்த புதன்கிழமை கருத்து வெளியிட்டிருந்தார். இத தொடர்பில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தனர். மேலும் மங்கள சமரவீரவைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில், அவரின் இந்தக் கூற்றை நிராகரிக்கும் வகையிலேயே ஜனாதிபதியின் இக்கருத்து அமைந்திருந்தது.
மேலும், இலங்கையின் சுதந்திரம், இறையாண்மை போன்றவற்றுக்கு சவால் விடுக்கும் வகையில் எந்தவித தேசிய மற்றும் சர்வதேச நடவடிக்கைகளுக்கும் தாம் அனுமதியளிக்கப்போவதில்லை என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.








