ஓமந்தை பேய்கள் உலாவும் இடம்..!! - THAMILKINGDOM ஓமந்தை பேய்கள் உலாவும் இடம்..!! - THAMILKINGDOM
 • Latest News

  ஓமந்தை பேய்கள் உலாவும் இடம்..!!  பேய்கள் உலாவும் இடமான ஓமந்தையில் பொருளாதார மத்திய நிலையத்தை அமைத்தால் எவரும் அங்கு செல்ல மாட்டார்கள் என அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்ததாக வடமாகாண முதல மைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

  வடக்கிற்கான பொருளாதார மத்திய நிலையத்தை அமைப்பது தொடர்பில் நிலவும் சர்ச்சை குறித்து கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

  இந்த விடயம் குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

  பொருளாதார மையத்தை இரு இடங்களில் அமைப்பதற்கான காரணம் அதனை ஒரு இடத்தில் ஆரம்பித்திருந்தால் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் நிறைவு செய்ய முடியாது.

  அத்துடன் எதிர்வரும் 5 மாதங்களில் மழை காலம் ஆரம்பிக்கவுள்ளது. எனவே அதனை நிறைவு செய்யாது அதற்கென ஒதுக்கப்பட்ட நிதி திரும்பியிருக்கும்.

  இதேவேளை குறித்த பொருளாதார மையத்தை மதவாச்சியில் அமைக்கவேண்டுமென அமைச்சர் பி.ஹரிசன் கோரிக்கை விடுத்திருந்தார்.

  எனினும் நான் கடந்த 21ஆம் திகதி அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த பின்னர் வவுனியாவில் அமைப்பதற்கு உடன்பட்டார். ஆனால் ஓமந்தையில் அமைக்க வேண்டும் என்ற எமது தீர்மானத்தை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. அதுமட்டுமன்றி தலவாக்கலை நகரிலிருந்து 2 கிலோமீற்றருக்கு அப்பால் பொருளாதார மத்திய நிலையம் அமைந்ததால் யாரும் அங்கு செல்வதில்லை என குறிப்பிட்டார்.

  ஆகவே பேய்கள் உலாவும் இடமான ஓமந்தையில் இதனைக் கொண்டு சென்று அமைத்தால் எவருமே செல்ல மாட்டார்கள் என்ற கருத்தை அவர் முன்வைத்தார். அத்துடன் தான் நினைத்த இடத்தில் அமைக்க வேண்டும் என்று எண்ணுகின்றாரே தவிர வடமாகாண மக்களுக்கு பொருத்தமான இடத்தில் அமைய வேண்டும் என சிந்திக்கவில்லை.

  இதேவேளை 200 மில்லியனை இரண்டாக பிரித்து, அவர் குறிப்பிடும் மாங்குளத்தில் ஒன்றும் வவுனியாவில் மற்றொன்றையும் அமைப்பதாக அண்மையில் அமைச்சரவை உபகுழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

  வவுனியாவில் எந்த இடத்தில் அமைப்பது என்பது தொடர்பாக என்னுடன் பேச வேண்டும் என அவரிடம் கூறப்பட்டது. இரண்டு நாட்களுக்கு முன்னர் தொலைபேசியில் தொடர்புகொண்ட ஹரிசன், குறித்த மத்திய நிலையத்தை வவுனியா - மதகுவைத்த குளத்தில் அமைக்கலாம். அதற்கு நான் ஒத்துப்போகின்றேன் என கூறினார்.  எனினும் குறித்த பகுதியில் அமைக்க முடியாது என நீங்கள் ஏற்கனவே கூறியிருந்தீர்கள் என கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த ஹரிசன்,

  தற்போது தான் குறித்த இடம் தொடர்பான முழுமையான விபரம் தனக்கு தெரியும் என குறிப்பிட்டதுடன் இது தொடர்பாக உடனடியாக கடிதம் ஒன்றை வழங்குமாறும் கோரிக்கை விடுத்தார். இதனையடுத்து நான் உரியவர்களுடன் கலந்துரையாடி கடிதம் ஒன்றை அனுப்பிவைத்தேன்.

  அத்துடன் ஆரம்ப வேலைக்காக 100 மில்லியன் பயன்படுத்தப்பட்டு 2017 ஆம் ஆண்டு பாதீட்டில் ஒதுக்கப்படவேண்டும் என்றும் குறிப்பிட்டு அமைச்சரவையில் குறிப்பிட்டது போல கூடியளவு கடலுணவு விற்பனை செய்வதற்கு ஏற்ற இடமாக மாங்குளத்தையும் மரக்கறிகளை விற்பனை செய்வதற்கு மதகுவைத்தகுளத்தையும் பயன்படுத்தினால் பொருத்தமாக இருக்கும் என்று தெரிவித்தேன். எனினும் இதற்கு ஆட்சேபனை வெளியிடப்பட்டுள்ளது என வடமாகாண முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: ஓமந்தை பேய்கள் உலாவும் இடம்..!! Rating: 5 Reviewed By: Tamilkingdom
  Scroll to Top