ஜனாதிபதிக்கும் பிரதமருக்குமிடையில் பிரச்சினையை ஏற்படுத்துவதற்கு சூழ்ச்சி
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இணைந்த அரசாங்கத்தின் ஒப்பந்தத்தை 5 வருடங்களுக்கு நீடிப்பது தொடர்பாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூடி தீர்மானமெடுக்கவுள்ளதாக அந்தக் கட்சியின் அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் இந்த ஊடகச் சந்திப்பில் மேலும் தெரிவிக்கையில்; கடந்த பாராளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனித்து அரசாங்கத்தை அமைக்கும் வகையில் ஆசனங்கள் கிடைக்கவில்லை.
இதனால் பிரதான இரண்டு கட்சிகளும் இணைந்து அரசாங்கத்தை அமைத்துள்ளன. எவ்வாறாயினும் 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் பிரகாரம் நான்கரை வருடத்திற்கு பின்னரே அரசாங்கத்தை கலைக்க முடியும். இதனால் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசிய கட்சியும் இணைந்து 2 வருடங்களுக்கு மேற்கொண்டுள்ள ஒப்பந்தம் முடிவடைந்தால் யாருக்கும் அரசாங்கத்தை அமைக்க முடியாத நிலையே ஏற்படும்.
இதனால் ஒப்பந்தத்தை 5 வருடங்களாக நீடிக்க வேண்டும். இது தொடர்பாக கட்சியின் மத்திய செயற்குழு கூடி தீர்மானமெடுக்கும். எவ்வாறாயினும் நிலையான அபிவிருத்திக்கு நிலையான அரசாங்கம் இருக்க வேண்டும். இதனால் அந்த ஒப்பந்தம் நீடிக்கப்பட வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட நிலைப்பாடாகும் என அவர் தெரிவித்தார்.








