Breaking News

விக்னேஸ்வரனை இணைக்குமாறு ஜனாதிபதி விடுத்த கோரிக்கை புறக்கணிக்கப்பட்டதா?

வட மாகாண மீள்குடியேற்றச் செயலணியில் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனையும் உள்வாங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய ஆலோசனை புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் இதன் விளைவாக மீள்குடியேற்ற செயலணி விவகாரம் விவாதத்திற்குரியதாகியுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

மீள்குடியேற்ற செயலணியை உருவாக்கும் அமைச்சரவைப் பத்திரம் அமைச்சரவையில் முன்வைப்பதற்கு முன்னர் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஜனாதிபதி இது தொடர்பாக தனது கருத்தை தெரிவித்திருந்தார். வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனையும் மீள்குடியேற்ற செயலணியில் உள்வாங்குமாறு ஜனாதிபதி பரிந்துரை செய்தார். ஜனாதிபதியின் பரிந்துரையை உள்வாங்காமலேயே அமைச்சரவைப் பத்திரத்துக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அமைச்சர் ரிசாத் பதியுதீனே ஜனாதிபதியின் பரிந்துரையை உள்ளீர்ப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து விக்னேஸ்வரனின் பெயர் இந்த செயலணியில் இடம்பெறாது போனதற்கான காரணமெனக் கூறப்படுகிறது. வட மாகாண முதலமைச்சரை உள்ளீர்க்காமல் உருவாக்கப்பட்ட மீள்குடியேற்ற செயலணிக்கு வட மாகாண சபை தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. வட மாகாண சபையின் அமர்வு கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற போது மீள்குடியேற்ற செயலணிக்கு எதிர்ப்புத் தெரிவித்து தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. 

இவ்வாறானதொரு நிலையில் மீள்குடியேற்ற செயலணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நான்காவது உறுப்பினராக அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவின் பெயரை பரிந்துரைத்துள்ளார்.மீள்குடியேற்ற செயலணியில் அமைச்சர்களான ரிசாத் பதியுதீன், பைசர் முஸ்தபா, டி.எம்.சுவாமிநாதன் ஆகியோர் ஏற்கனவே உள்ளடக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதியின் பரிந்துரையை அமைச்சரவைத் தீர்மானத்தில் உள்வாங்காமை தொடர்பில் ரிசாத் பதியுதீன் எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகின்ற போதும் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அமைச்சர் ரிசாத் பதியுதீன்; 

வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம், சிங்கள மக்களை ஒரு கட்டமைப்பின் கீழ் குடியமர்த்தி அவர்களை நிம்மதியாக வாழ வைப்பதற்கு உருவாக்கப்பட்ட மீள்குடியேற்ற செயலணியின் செயற்பாடுகளை முடக்கும் வகையில் வட மாகாண சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. செயலணியின் நோக்கங்களை திரிபுபடுத்தி அதன் எதிர்கால நடவடிக்கைகளை கறுப்பு கண்ணோடு பார்த்து வரும் வட மாகாணசபையின் போக்கை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.