Breaking News

தொகுதிவாரியாகவும் மஹிந்தவைப் பலவீனப்படுத்த மைத்திரி வியூகம்!



மஹிந்தவுக்கு விசுவாசமாகச் செயற்படும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களின் பதவிகளைப் பறித்துவிட்டு, தமது விசுவாசிகளுக்கு அமைப்பாளர் பதவி வழங்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்குரிய தயார்படுத்தல் நடவடிக்கையில் சுதந்திரக் கட்சி தீவிரமாக இறங்கியுள்ளது. இதன் ஓர் அங்கமாகவே தொகுதி அமைப்பாளர் பதவியிலும் மாற்றம் கொண்டுவரப்படவுள்ளது.

அதேவேளை, பதுளை, கண்டி, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள சு.க. உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

ஏனைய மாட்டங்களில் நாளைமறுதினம் ஓகஸ்ட் 2ஆம் திகதி முதல் நவம்பர் 11ஆம் திகதிவரை வேட்பாளர் தேர்வு இடம்பெறவுள்ளது.

நவம்பர் 1, 2, 3 ஆம் திகதிகளில் அப்பாந்தோட்டை மாவட்டத்திலும், நவம்பர் 8ஆம் திகதி தொடக்கம் 11ஆம் திகதிவரை கொழும்பிலும் வேட்பாளர் தேர்வு இடம்பெறவுள்ளது. வேட்பாளர்களின் இறுதிப் பட்டியலை நவம்பர் மாதத்திற்கு முன்னர் தயாரிக்கும் முயற்சியிலேயே சு.க. தீவிரமாக இறங்கியுள்ளது.

இந்நிலையில், மஹிந்த அணியான பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசுக்கு எதிராக பாரிய மக்கள் சக்தியை திரட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு கட்டமாகத்தான் அரசுக்கு எதிரான பாதயாத்திரையையும் முன்னெடுத்துள்ளனர்.

அரசுக்கு எதிராக பொது எதிரணியினர் மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கையும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை இலக்காகக் கொண்டு அமைந்துள்ளது. அதனை முறியடிக்கும் வகையில் சு.கவின் தலைவர் ஜனாதிபதி மைத்திபால சிறிசேன கட்சிக்குள் இராஜதந்திர காய்நகர்த்தல்களை மேற்கொண்டு வருகின்றார்.

குறிப்பாக கடந்த வாரம் தென்மாகாணத்திதல் மஹிந்தவுக்கு சார்பாகச் செயற்பட்ட இரண்டு அமைச்சர்களின் பதவியைப் பறித்து அவர்களுக்குப் பதிலாக தனது ஆதரவாளர்களை நியமித்திருந்தார்.

அடுத்ததாக பொது எதிரணியில் அங்கம் வகிக்கும் சு.கவின் நாடாளுமன் உறுப்பினர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தேர்தல் தொகுதிகளில் தமது ஆதரவாளர்களை நியமிப்பதற்கான மந்திர ஆலோசனைகளை சு.கவின் உயர்மட்டக் குழுவுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்டு வருகின்றார்.

அவ்வாறான முயற்சிகளில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிரடியாக இறங்கும் பட்சத்தில் சு.கவில் பாரிய கருத்து மோதலும் பிளவும் ஏற்படும் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றது.