பாத யாத்திரை சற்றுமுன் ஆரம்பமாகியது
தேசிய அரசாங்கத்திற்கு எதிரான ஒன்றிணைந்த எதிரணியின் பாத யாத்திரை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கண்டியின் புறநகர் பகுதியான கெட்டம்பே எனும் இடத்திலிருந்து ஆரம்பமாகியுள்ளது.
கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் நடைபெற்ற பூஜை வழிபாட்டினை அடுத்து, காலை 9 மணிக்கு குறித்த பாதயாத்திரை ஆரம்பமாகியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள மஹிந்த ராஜபக்ஷ, குறித்த பாத யாத்திரையை தடுக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், எனினும், மதிப்பளிக்கவேண்டிய விடயங்களுக்கு மதிப்பளித்து, எத்தகைய சவால்கள் ஏற்பட்டாலும் அதற்கும் முகங்கொடுத்து முன்னோக்கிச் செல்வோம் எனக் குறிப்பிட்டார்.
குறித்த பாதயாத்திரையில் கலந்துகொண்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, தமக்கு மக்கள் ஆதரவு அதிகரித்து வருவதாகவும், தற்போதே சுமார் ஒரு இலட்சம் வரையான மக்கள் கலந்துகொண்டுள்ளதாகவும் தெரிவித்தார். கொழும்பை அடையும் போது சுமார் 10 இலட்சம் பேர் தம்முடன் இணைந்திருப்பர் என்றும் குறிப்பிட்டார்.
அத்தோடு, நேற்றைய நீதிமன்ற தீர்ப்பை தவறாக விளங்கிக்கொண்ட சிலர், பாத யாத்திரை இடைநிறுத்தப்பட்டதாக எண்ணி திரும்பிச் சென்றுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இன்று ஆரம்பமாகியுள்ள குறித்த பாத யாத்திரை, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி கொழும்பை வந்தடையும். அன்றைய தினம் கொழும்பு ஹைட் பார்க் மைதானத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த தலைமையில் கூட்டமொன்றை நடத்த ஏற்பாடாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தொடர்புடைய செய்தி








