Breaking News

காணாமல் போனோர் சான்றிதழ் இவ்வருட இறுதிக்குள் வழங்கப்படும்



யுத்தத்திற்கு முன்னரும் அதற்குப் பின்னரும் பல்வேறு செயற்பாடுகளினால் காணாமல் போனவர்களை காணாமல் போனோர் என்று உறுதிசெய்து அதற்கான சான்றிதழை வழங்கும் நடவடிக்கை இந்த வருடத்தில் ஆரம்பிக்கப்படும் என்று ஸ்ரீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து வடக்கு, கிழக்கு மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பு வெளியிட்டிருக்கும் நிலையில் கூட்டமைப்பினருடன் கலந்துரையாடி அவர்களது யோசனைகளும் பெற்றுக்கொள்ளப்படும் என்று உள்விவகார அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

பொலனறுவையில் நாளை மறுதினம் முன்னெடுக்கவுள்ள நடமாடும் சேவை தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பிலுள்ள உள்விவகார அமைச்சில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் வஜிர அபேவர்தன, காணாமல் போன ஊடகவியலாளர்களுக்கும் காணாமல் போனமையை உறுதிசெய்து சான்றிதழ் பெற்றுக்கொள்ளவும் முடியும் என்றும் கூறினார்.

‘காணாமல் போனோர் சான்றிதழுக்கு காணாமல் போனோர் சான்றிதழ் என்றே பெயரிடப்பட்டுள்ளதோடு இதனடிப்படையிலேயே சான்றிதழும் வழங்கப்படும். இந்த நடவடிக்கையை ஜனாதிபதி அலுவலகம், பிரதமர் அலுவலகம் என்பன இணைந்து குறித்த பணியக நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளன. காணாமல் போனோர் பணியகம் அமைக்கப்பட்ட பின்னர் பிரதேச செயலகங்கள், மாவட்ட பதிவாளர்கள், உள்விவகார அமைச்சு, கிராம அலுவலர்கள் ஊடாக சான்றிதழுக்கான தகவல்கள் பெற்றுக்கொள்ளப்படும். 

நாட்டில் இல்லாத ஒருநபர் காணாமல் போயிருப்பதாக முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டிருந்தால் அவர் சில சந்தர்ப்பத்தில் படகு மூலமோ அல்லது வேறு வழியிலோ பிறநாட்டிற்கு சென்றிருக்கலாம். இவ்வாறான சூழ்நிலையில் ஏனைய சாட்சியங்கள், ஆதாரங்களின் அடிப்படையிலேயே தீர்மானம் எடுக்க முடியும். முறைப்பாடு கிடைக்கின்ற சந்தர்ப்பத்திலேயே காணாமல் போனதை உறுதிசெய்ய முடியாது. 

எனவே கிராம அலுவலர்கள் ஊடாக அதிகாரிகளின் மூலம் முறைப்பாடு உறுதிப்படுத்தப்படும். அதற்காகவே காணாமல் போனோர் பணியகம் அமைக்கப்படும். இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் கிராம புறங்களில் தகவல்கள் முன்வைக்கப்படும். இதில் பிழையான தகவல்களை வழங்குவோருக்கு எதிராக 5 வருட சிறைத்தண்டனை விதிக்கும் வகையில் இதற்கான சட்டம் கூறுகின்றது” - என்றார்.

இதேவேளை படகு அல்லது வேறு வழிகளில் வெளிநாடுகளுக்குச் சென்றவர்கள் காணாமல் போயிருப்பதாக முறைப்பாடு பதிவாகியிருந்தால் அதனை எவ்வாறு உறுதிப்படுத்துவீர்கள் என வினா எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் வழங்கிய அமைச்சர், “அவ்வாறான முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்கு வெளிநாட்டு தூதரகங்களிடமும் உதவிகள் கோரப்படும்” -என்றார். 

யுத்தத்தின்போது காணாமல் போனவர்களை மட்டும் இலக்காகக் கொண்டு இந்த சான்றிதழ் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதா என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் வழங்கிய அமைச்சர், “அவ்வாறான வரையறைகள் உள்ளடக்கப்படவில்லை. 1971ஆம் ஆண்டு கலவரம், 87 மற்றும் 89களில் ஏற்பட்ட கலவரம், ஜுலை கலவரம் ஆகியவற்றில் காணாமல் போனவர்கள் தொடர்பாகவும் காணாமல் போனோர் சான்றிதழைப் பெற முடியும். அதேவேளை காணாமல் போன ஊடகவியலாளர்களுக்கான எந்தவித சான்றிதழும் தற்போது இல்லை. அவர்களுக்கான உரிமை மற்றும் ஏனையவற்றைப் பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பங்களும் இல்லை. அவர்கள் விருப்பம் இல்லாத போதிலும் இந்த காணாமல் போன சான்றிதழைப் பெற்றுக் கொள்ளவும் முடியும்” -என்றார்.

எப்போது இந்த சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று இதன்போது வினவப்பட்டது.இதற்கு பதில் வழங்கிய அமைச்சர், “முடிந்தளவு இந்த வருடத்தில் சான்றிதழை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்” -என்றார்.

இதேவேளை வடக்கு, கிழக்கு மக்கள் இந்த காணாமல் போனோர் சான்றிதழைப் பெறுவதற்கு எதிர்ப்பு வெளியிடுகின்றனர். அத்துடன் அவர்களது பிரதிநிதிகளான தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் இதற்கு எதிர்ப்பை வெளியிட்டு வரும் நிலையில் எவ்வாறு இந்தக் சான்றிதழை வழங்க நடவடிக்கை எடுப்பீர்கள் என்று அமைச்சரிடம் வினவப்பட்டது.

இதற்கு பதில் வழங்கிய அமைச்சர், “வர்த்தமானியில் அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடன் கலந்துரையாடி அவர்களது யோசனைகளும் பெற்றுக்கொள்ளப்படும்”- -என்றார்.