கொத்துக் குண்டு விவகாரம் : உடன் விசாரணை வேண்டும்!
இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின்போது, மக்களுக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்தும் வல்லமைக் கொண்ட கொத்துக்குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அதுகுறித்து பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றியபோதே, அவர் இவ்விடயத்தை தெரிவித்தார். அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்-
”வடக்கில் கொத்துக் குண்டுகள் வீசப்பட்டதாக மக்கள் தமது முறைப்பாடுகளில் ஏற்கனவே தெரிவித்திருந்தனர். யுத்தம் நடைபெற்ற காலத்தில் கொத்துக்குண்டுகளின் பாவனைக்கு தடையில்லையென்றும், ஆகவே அந்தக் காலத்தில் கொத்துக் குண்டுகள் வீசப்பட்டிருந்தால் அது சட்டவிரோதமானதல்லவென்றும் காணாமல் போனோர் குறித்து விசாரணை செய்யும், ஜனாதிபதி ஆரணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வல் பரணகம குறிப்பிட்டுள்ளார். அவரது இந்தக் கருத்தின் பிரகாரம், வடக்கில் கொத்துக்குண்டுகள் வீசப்பட்டமை உறுதியாகின்றது.
வடக்கில் கொத்துக் குண்டுகள் வீசப்பட்டதா என்பது தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரண நடத்தப்பட வேண்டுமென, ஐ.நா ஆணையாளரும் வலியுறுத்தியுள்ளார். எனவே நாட்டு மக்கள் உண்மையை அறிந்துகொள்ள, அரசாங்கம் இவ்விடயம் குறித்து உரிய விசாரணை நடத்தி உண்மையை வெளிப்படுத்த வேண்டும்” என்றார்.
இறுதிக்கட்ட யுத்தத்தின்போது கொத்துக்குண்டுகள் வீசப்பட்டமைக்கான ஆதாரமாக, இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த ஹலோ ட்ரஸ்ட் நிறுவனத்தின் புகைப்படங்களை ஆதாரமாகக் கொண்டு, அண்மையில் சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டிருந்தது. \
குறிப்பாக, கொத்துக் குண்டுகளின் பாகங்கள் இலங்கை அரசாங்கத்தால் அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்டிருந்த பிரதேசங்களில் இருந்து பெரும்பாலும் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், இது மக்களை ஒட்டுமொத்தமாக பலியெடுக்கும் வகையில் நடத்தப்பட்ட, திட்டமிட்ட இனப் படுகொலையாக இருக்கலாமென மனித நேய செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.








