Breaking News

காணாமல் போனோரை பதிவுசெய்வதற்கான சட்டமூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு



யுத்தத்தின்போதும் அதன் பின்னரான காலப்பகுதியிலும் காணாமல் போனோரை பதிவுசெய்வதற்கான திருத்தச் சட்டமூலம், அமைச்சர் கயந்த கருணாதிலகவால் நேற்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

இறப்பு பதிவுச் சட்டத்தில், தற்காலிக ஏற்பாடுகளாக காணாமல் போனோரை பதிவுசெய்யும் விடயத்தை திருத்தமாக உள்ளடக்கியே, குறித்த திருத்தச் சட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த சட்டமூலத்தின் பிரகாரம், காணாமல் போனோர் தொடர்பில் ஒருவருடத்திற்கு மேலாக எவ்வித தகவல்களும் கிடைக்கப்பெறாதவிடத்து, அவர் குறித்து விண்ணப்பிக்க முடியும். காணாமல் போனோர் எந்த கிராம சேவகர் பிரிவில் வசித்தாரோ அந்த கிராம சேவகர் பிரிவு அலுவலரின் அறிக்கையொன்றுடன், விண்ணப்பதாரியின் சத்தியக் கடதாசியுடன் விண்ணப்பிக்க முடியுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

காணாமல் போனோர் தொடர்பில் வழங்கப்படும் சான்றிதழை வழங்குவதற்கு பதிவாளர்கள் மறுக்கும் பட்சத்தில், காணாமல் போனோரின் உறவினர்கள் அதுகுறித்து நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யலாம். நீதிமன்றம் இதுகுறித்து ஆவணங்களை பரிசீலித்து, காணாமல் போனோர் தொடர்பான சான்றிதழை வழங்குமாறு பணிக்கலாம்.

காணாமல் போனோர் தொடர்பில் வழங்கப்படும் சான்றிதழை, ஏதேனும் சமூக சேமநலத் திட்டத்தின் கீழான நன்மைகளுக்காக விண்ணப்பித்தல், காணாமல்போன ஆளின் ஆதனங்களையும் சொத்துக்களையும் மாவட்ட நீதிமன்றத்தின் மேற்பார்வையின் கீழ் தற்காலிகமாக முகாமை செய்வதற்கும், காணாமல் போனவரின் பிள்ளைகளுக்கு பாதுகாவலராக செயலாற்றுதல் உள்ளிட்ட விடயங்களுக்கு அவரது உறவினரால் பயன்படுத்த முடியும். அத்தோடு, சகல நிறுவனங்களும் குறித்த சான்றிதழை அங்கீகரித்து ஏற்றுக்கொள்ள வேண்டுமென விதந்துரைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, காணாமல் போனோரின் உடல் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அல்லது இறந்துவிட்டமை உறுதியாகும் பட்சத்தில், காணாமல் போனோர் தொடர்பான சான்றிதழை அழித்துவிட்டு, இறப்புச் சான்றிதழ் வழங்கப்பட வேண்டுமென குறித்த திருத்தச் சட்டத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போனோர் தொடர்பில் எவ்வித தகவல்களும் கிடைக்காத நிலையில், அவர்களது சொத்துக்கள் மற்றும் பிள்ளைகளின் கல்வி உள்ளிட்ட செயற்பாடுகளில் உறவினர்களால் எவ்வித செயற்பாட்டையும் முன்னெடுக்க முடியாமல் உள்ள நிலையில், குறித்த திருத்தச் சட்டமூலம் அவற்றிற்கு தீர்வாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.