Breaking News

இணைந்த வடக்கு கிழக்கிற்கு சமஷ்டித் தீர்வு - வடமாகாண சபை வலியுறுத்தல்

இணைந்த வடக்கு கிழக்கிற்கு சமஸ்டி முறையிலான அதிகாரப் பரவலாக்களை உள்ளடக்கிய அரசியலமைப்பு மாற்றத்தினையே வட மாகாண மக்கள் கோரி நிற்பதாக வடமாகாண  சபை வலியுறுத்தியுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசியலமைப்பு பேரவையின் வழிநடத்தற்குழுவிற்கு முன்னால் இன்று வெள்ளிக்கிழமை முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் சார்பில் வடமாகாண கல்வி அமைச்சர் தம்பிராஜா குருகுலராஜா மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா ஆகியோர் பிரசன்னமாகி இந்த நிலைப்பாட்டை முன்வைத்துள்ளனர்.

வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருவதால் அவர் சார்பில் வடமாகாண கல்வி அமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவரும் குறித்த குழு முன்னிலையில் பிரசன்னமாகி வடமாகாண சபையினால் தயாரிக்கப்பட்ட அரசியலமைப்பு மாற்றத்திற்கான முன்மொழிவு தொடர்பாக வாய்மூல விளக்கத்தை அளித்தனர்.

13வது திருத்தச் சட்டத்தின் அனுபவங்கள் அடிப்படையிலும், ஓர் இனம் மற்றைய இனத்தை ஆதிக்கம் செலுத்தவோ, கீழ்ப்படிய வைக்கவோ முடியாத வகையிலும் அரசியலமைப்பு மாற்றம் அமைய வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டே வட மாகாண சபையின் வரைபு தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இறைமை பகிரப்பட்ட, காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் உள்ளடங்கலான சமஸ்டியை அடிப்படையாக கொண்ட அரசியலமைப்பே தமிழ் மக்களின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யுமென்றும் வடமாகாண கல்வி அமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவரும் எடுத்துரைத்துள்ளனர்.

அத்துடன் இணைந்த வடக்கு, கிழக்கில் வாழும் முஸ்லிம்களின் கரிசனைகளை உள்ளடக்கிய ஓரு தீர்வினையே தாம் பரிந்துரைப்பதாகவும் தெரிவித்த அவர்கள், வடமாகாண சபையின் இரு சிங்கள உறுப்பினர்கள் தவிர்ந்த ஏனைய 36 உறுப்பினர்களாலும் வடமாகாண சபையின் முன்மொழிவு ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டது எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசியலமைப்பு பேரவையின் வழிநடத்தற்குழுவிற்கு தெரியப்படுத்தினர்.

இதனால் வட மாகாண மக்களின் ஒருமித்த கருத்தை அரசாங்கம் கவனத்தில் கொண்டு உறுதியான புதிய அரசியலமைப்பு மாற்றத்தினை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, வடமாகாண எதிர்க்கட்சி தலைவர் தவராசா அங்கம் வகிக்கும் சிரேஷ்ட சட்டத்தரணி லால் விஜேநாயக்க தலைமையிலான அரசியல் மறுசீரமைப்பிற்கான மக்கள் கருத்தறியும் செயற்குழு நாடாளுமன்றில் சமர்ப்பித்த தனது இறுதி அறிக்கையில், வடக்கு கிழக்கு இணைந்த ஆட்சியையோ அல்லது சமஷ்டி முறையையோதமிழ் மக்கள் கோரவில்லையென தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.