கட்டுவன் சந்தி 26 வருடங்களின் பின்னர் மக்கள் பாவனைக்காக விடுவிப்பு
இராணுவத்தினர் வசமிருந்த கட்டுவன் சந்தி 26 வருடங்களின் பின்பு மக்கள் பாவனைக்காக நேற்று (வியாழக்கிழமை) முதல் திறந்து விடப்பட்டுள்ளது.
இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்து கட்டுவன் சந்திவரை செல்லும் சுமார் 600 மீற்றர் வரையான வீதியே இதன்போது விடுவிக்கப்பட்டுள்ளது.
முன்பு வறுத்தலைவிளானிலிருந்து கட்டுவனுக்கு செல்லும் வீதியை மறித்து இராணுவத்தினரால் புதிய வீதி அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்றைய தினம் அப்பகுதியிலிருந்து முட்கம்பிகள் அகற்றப்பட்டு கட்டுவன் சந்திக்கான நேர் வீதி திறக்கப்பட்டுள்ளதுடன் வலது பக்க காணிகள் முழுமையாக மக்களிடம் விடுவிக்கப்பட்டுள்ளது.
எனினும் கட்டுவன் சந்தியிலிருந்து அச்சுவேலிக்கான வீதி திறக்கப்படவில்லை. அப்பாதை விரைவில் திறக்கலாம் எனக் கூறப்படுகிறது. அந்த வீதியில் முட்கம்பி வேலி அமைக்காது தற்காலிக வேலியாக இராணுவத்தினர் வரும்போது திறந்து மூடப்படுகிறது.
இதேவேளை தெல்லிப்பழையிலிருந்து வல்லை அராலி வீதியூடாகசெல்பவர்கள் கட்டுவன் சந்திவரைக்கும் மட்டுமே பயணிக்க முடியும் அதேபோன்று அச்சுவேலியில் இருந்து வல்லை அராலி வீதியூடாக வருபவர்கள் ஒட்டகப்புலம் சிஸ்ரர் மடத்தடி வரைக்கும் மட்டுமே பயணம் மேற்கொள்ள முடியும்.
இவ்வாறு விடுவிக்கப்பட்ட பகுதிகளினால் பொதுமக்கள் கட்டுவன் சந்திவரைக்கும் சென்று அங்கிருந்து குரும்பசிட்டி ஊடாக வசாவிளான் – பலாலி வீதியினை சென்றடைய முடியும்.








