Breaking News

ஓமந்தையில் அமைப்பதற்கான காரணத்தை தெளிவுபடுத்தினார் முதல்வர்



வடக்கிற்கான பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைப்பதற்கான தீர்மானம் கடந்த 2010 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

வடக்கிற்கான பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதற்கான காணியை தாண்டிக்குளம் மற்றும் ஓமந்தை பகுதிகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சிவசக்தி ஆனந்தன் மற்றும் வடமாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் ஆகியோர் நேற்று சனிக் கிழமை காலை பார்வையிட்டனர்.

இதனையடுத்து வடக்கிற்கான பொருளாதார மத்திய நிலையத்தை எங்கு அமைப்பு என்பது குறித்து வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனுடன், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இன்று ஞாயிற்றுக்கிழமை கலந்துரையாடியிருந்தார்.

இதன்போது வடக்கிற்கான பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தையில் அமைக்கப்படுவதற்கான காரணத்தை வடமாகாண முதலமைச்சர் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவிற்கு தெளிவுபடுத்தியுள்ளார்.

2010 ஆம் ஆண்டு கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் ரிஷட் பதியூதினின் தலைமைத்துவத்தின் கீழ் அப்போதைய வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திர சிறியின் பதவிக்காலத்தில் ஓமந்தையில் பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதற்கான காணி தெரிவு செய்யப்பட்டதுடன், பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதற்காக அனைத்து திணைக்களங்களின் அனுமதிகள் பெற்றுக்கொள்ளப்பட்டு வரைபடங்கள் தயாரிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதனால் எந்தவொரு பிரச்சினைகளும் இன்றி ஓமந்தையில் பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதற்கான காணியை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவித்த வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், அதற்கான அனுமதியை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்களிடமிருந்து எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டார்.