யாழ் பல்கலைக்கழக மோதல்! வடக்கிலிருந்து இராணுவ முகாம்களை அகற்ற வேண்டாம்!
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தினை தேசிய பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கம் கண்டித்து ள்ளது.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சிங்கள மாணவர்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதல்களை தேசிய பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கம் வன்மையாக கண்டிக்கின்றது என அந்த சங்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கத்தின் செயலாளர் கலாநிதி சன்ன ஜயசுமனவின் கையொப்பத்தில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும், விரிவுரையாளர்கள் மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் எதிரில் இந்த தாக்குதல் திட்டமிட்ட வகையில், இனவாத அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளமை தெளிவாகின்றது.
தமிழ் மாணவர்களுக்கு இலங்கையின் எந்தவொரு பகுதியிலும் சென்று சுதந்திரமாக கல்வி பயில உரிமை உண்டு.இந்த உரிமை சிங்கள மாணவர்களுக்கும் அதேவிதமாக இருக்க வேண்டும்.
இது தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமாகின்றது.
யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா பீடங்களில் கல்வி பயிலும் சிங்கள மாணவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றோம்.
இவ்வாறான இனவாத செயற்பாடுகள் நாட்டின் தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும்.
எனவே வடக்கின் எந்தவொரு இராணுவ முகாமினையும் அகற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கக் கூடாது என தேசிய பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.








