Breaking News

மங்கள பதவி விலக வேண்டும்! -கூட்டு எதிர்க்கட்சியினர் வலியுறுத்தல்



ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கருத்தை சவாலுக்கு உட்படுத்திய வெளிவிவார அமைச்சர் மங்கள சமரவீர பதவி விலக வேண்டுமென கூட்டு எதிர்க்கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.

ஸ்ரீலங்கா நடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட கூட்டு எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன, மங்கள சமரவீர வெளிவிவகார அமைச்சராகவோ, அல்லது அமைச்சரவை அந்தஸ்துள்ள பதவி ஒன்றை வகிக்கவோ தகுதியற்றவர் எனத் தெரிவித்துள்ளார்.

யுத்தக் குற்றங்கள் தொடர்பிலான உள்ளக நீதிமன்ற விசாரணை பொறிமுறைக்கு சர்வதேச நீதிபதிகளின் தலையீடு அவசியமற்றது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கூறிவரும் நிலையில் அது அரசாங்கத்தின் இறுதியான முடிவல்ல என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கூறி வருகின்றார்.

ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 32 ஆவது கூட்டத்தொடரில் கலந்துகொண்டு உரையாற்றிய போதும், அதற்குப் பின்னர் நேற்று முன்தினம் புதன்கிழமை கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலும் மங்கள சமரவீர இந்தக் கருத்தை வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில், நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் கூட்டு எதிர்கட்சியினர் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில், மங்கள சமரவீரவின் இந்தக் கருத்துக்களை சவாலுக்கு உட்படுத்திய தினேஸ் குணவர்தன கடும் எதிர்ப்பையும் வெளியிட்டுள்ளார்.

குறிப்பாக ஜனாதிபதியின் கருத்தை மறுதலிக்கும் வகையில் யுத்தக்குற்ற விசாரணைகளுக்கு சர்வதேச நீதிபதிகளின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளலாம் என்ற வகையில் மங்கள கருத்து வெளியிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஒரு ஜனநாயக நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில் அவரது கருத்துக்கு மதிப்பளிக்காது வெளிவிவகார அமைச்சர் தெரிவித்திருக்கும் கருத்தானது ஜனாதிபதியின் கருத்தை சவாலுக்கு உட்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகவும் தினேஸ் குணவர்தன குற்றம்சாட்டியுள்ளார்.

ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, கடந்த புதன்கிழமை இடம்பெற்ற ஊடகச் சந்திப்பின்போது, உள்ளக பொறிமுறை விசாரணை தொடர்பிலான விடயத்தில் சர்வதேசத்தின் ஒத்துழைப்பை அரசாங்கம் முழுமையாக நிராகரிக்கவில்லை என்றும் கூறியிருந்ததுடன், ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் கருத்துக்கள் இறுதியான முடிவாகக் கொள்ளத் தேவையில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.