Breaking News

போர்க்குற்ற சாட்சியம் : இலங்கை தூதரகங்கள் பாதுகாப்பானவை அல்ல!



யுத்தக் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் குறித்த சாட்சியங்களை, வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரங்களில் வழங்குவதானது, சாட்சியாளர்களுக்கு மிகவும் ஆபத்தானதாக அமையுமென ஐ.நா நிபுணர் குழுவின் உறுப்பினரும் சர்வதேச மனித உரிமைச் சட்டத்தரணியுமான யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.

குறித்த சாட்சியங்களை வெளிநாடுகளிலுள்ள இலங்கை தூதரங்களில், அந்தந்த நாடுகளில் உள்ளவர்கள் வழங்கலாம் என்ற வகையிலான சட்டத்திருத்தத்திற்கு கடந்த வாரம் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதன் மூலம், வெளிநாடுகளிலுள்ள சாட்சியாளர்கள் அந்தந்த நாடுளிலுள்ள இலங்கை தூதரகங்களில் இருந்து ஒலி, ஒளி வடிவங்களில் தமது சாட்சியங்களை வழங்கலாமென நீதியமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், வெளிநாடுகளிலுள்ள சாட்சியங்களை பெற்று அதனடிப்படையில் விசாரணை நடத்துவதற்கு இலங்கை அரசாங்கம் முன்வந்தமை வரவேற்கத்தக்க ஒன்றாக இருந்தாலும், குறித்த சாட்சியங்களை இலங்கை தூதரகங்களில் இருந்து வழங்குவதானது மிகவும் ஆபத்தானதாக அமையுமென யஸ்மின் சூக்கா சுட்டிக்காட்டியுள்ளார். அதாவது, இச்செயற்பாடானது, சாட்சியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தாருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் அமைந்துவிடுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, குறித்த சாட்சியங்களை வழங்குவதற்கு இலங்கை தூதரகங்களுக்கு செல்லும்போது, அவர்கள் யுத்தக் காலத்தில் குற்றமிழைத்தவர்களாக அடையாளம் காணப்படக்கூடிய சூழல் உள்ளதெனவும் குறிப்பிட்டுள்ளார். 

வெளிநாடுகளில் வாழும் பல சாட்சியாளர்களின் உறவினர்கள் இன்னும் இலங்கையில் உள்ள நிலையில், இது அபாயமானதாக அமையுமென குறிப்பிட்ட யஸ்மின் சூக்கா, சாட்சியாளர்களை பாதுகாப்பது தொடர்பில் அதிக சிரத்தை எடுக்க வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டியுள்ளதோடு, சாட்சியாளர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்தாது, அநாமதேயமான முறையில் பெற்றுக்கொள்வதே சாலச் சிறந்ததென குறிப்பிட்டுள்ளார்.