Breaking News

“காந்தி கனவு கண்ட ஆட்சியை நடாத்தியவர் பிரபாகரன்” – நடிகர் ராஜ்கிரண்

“இந்தியா சுதந்திரம் அடைஞ்சப்ப, ‘இதை நான் சுதந்திரம்னு சொல்ல மாட்டேன். ஓர் இளம் பெண், தங்க நகைகள் அணிந்துகொண்டு நள்ளிரவில் வெளியே சென்று பத்திரமாக என்று வீடு திரும்புகிறாளோ, அன்றுதான் இந்தியாவுக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்ததாக அர்த்தம்’னு சொன்னார் மகாத்மா காந்தி. அப்படி காந்தி கனவு கண்ட ஒரு ஆட்சியை, இலங்கையின் வடகிழக்கு மாகாணங்கள்ல பிரபாகரன் நடத்தினார் “ என பிரபல தமிழ் திரைப்பட நடிகரும் இயக்குனருமான ராஜ்கிரண் ஆனந்த விகடனுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

ஆனந்த விகடனின் ஈழம் தொடர்பான இரு கேள்விகளுக்கு ராஜ்கிரண் அளித்த பதில்கள்:

கேள்வி: ”அப்போ ”நந்தா’, இப்போ ‘சிவப்பு’னு இலங்கை அகதிகள் பத்தின படங்கள்ல ஈடுபாட்டோடு நடிக்கிறீங்களே?”



பதில் : ”நம்மள்ல பலர், சொந்த ஊர்ல இருந்து பொழைக்கிறதுக்காக சென்னைக்கு வந்திருக்கோம். இன்னைக்கு நினைச்சா நாளைக்கே சொந்த ஊருக்குப் போய் ஓடி ஆடின இடங்களைப் பார்க்க முடியும். ஆனா, அவங்களால முடியுமா? எல்லாத்தையும் இழந்து, அலைஞ்சு திரிஞ்சு இங்கே வந்திருக்காங்க. அவங்களைஅணுசரணையா பார்த்துக்கிட வேண்டாமா? ஆனா, உள்ளதை உள்ளபடி சினிமா சொல்ல இந்திய சென்சார் போர்டு அனுமதிக்காது. அரசியல் ரீதியாகவும் ஆதரவு கிடைக்காது.

இந்தத் தமிழ்நாட்டு, இந்திய அரசியல்வாதிகள் எல்லாரும் சேர்ந்து விடுதலைப் புலிகளையும், பிரபாகரனையும் ஏன் அழிச்சாங்கனு தெரியுமா? இந்தியா சுதந்திரம் அடைஞ்சப்ப, ‘இதை நான் சுதந்திரம்னு சொல்ல மாட்டேன். ஓர் இளம் பெண், தங்க நகைகள் அணிந்துகொண்டு நள்ளிரவில் வெளியே சென்று பத்திரமாக என்று வீடு திரும்புகிறாளோ, அன்றுதான் இந்தியாவுக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்ததாக அர்த்தம்’னு சொன்னார் மகாத்மா காந்தி. அப்படி காந்தி கனவு கண்ட ஒரு ஆட்சியை, இலங்கையின் வடகிழக்கு மாகாணங்கள்ல பிரபாகரன் நடத்தினார்.

‘இந்தத் தகவல் வெளியே தெரிஞ்சா, அப்படி ஒரு ஆட்சியைத்தானே எதிர்பார்ப்பாங்க? ஆனா, நாம அப்படி ஆட்சி நடத்த முடியாதே. கொள்ளை அடிச்சோமா, சொத்து சேர்த்தோமானு இருக்க முடியாதே’னு தமிழக, இந்திய, உலக அரசியல்வாதிகளுக்குப் பயம். அதான் அவருடைய ஆட்சிப் பெருமைகள் வெளியே தெரியாமல் அழிச்சுட்டாங்க!”

கேள்வி : ”ஆனா, பிரபாகரனும் இங்கே இருக்கிறவங்களை நம்பினாரே..! அரசியல், சினிமா துறையைச் சேர்ந்த சிலர் அவரைச் சந்திச்சுட்டு வந்தாங்களே?”

பதில்: ”சில கருத்துக்களை சினிமா, நாடகம் போன்ற கலை மூலமா மக்களிடம் எளிமையா கொண்டுபோய்ச் சேர்க்க முடியும். அதனால அங்கே உள்ளவர்களுக்கு நாடகம், சினிமால பயிற்சி வேணும்னு இங்கே உள்ள சினிமா சம்பந்தப்பட்ட ஆட்கள் சிலரை தலைவர் பிரபாகரன் கூப்பிட்டார். அப்படித்தான் பாரதிராஜா, மகேந்திரன், சீமான்னு நாலைஞ்சு பேரைக் கூப்பிட்டு ஆளுக்கு10 நிமிஷம், அரை மணி நேரம் பேசியிருக்கார். அவ்வளவுதான். ‘சினிமா பத்திப் பேசுங்கப்பா’னு சொல்லி இவங்களைக் கூட்டிட்டுப் போனதுதான். ஆனா, அங்க போய் ஏதோ உலக அரசியலையே அவர்கிட்ட உட்கார்ந்து விவாதிச்சுட்டு வந்த மாதிரி சிலர் பேசிட்டு இருக்காங்க!”