Breaking News

காணிகளை விடுவிக்குமாறு கோரி பரவிப்பாஞ்சான் மக்கள் ஆர்ப்பாட்டம்!

கிளிநொச்சி பரவிபாஞ்சான் மக்கள் தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

இந்த தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்று சனிக்கிழமை காலை பரவிபாஞ்சான் பிரதான ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி நகரை அண்மித்த பிரதேசமான பரவிப்பாஞ்சானில் 180 ஏக்கர் காணிகளை இராணுவம் கையகப்படுத்தி வைத்துள்ளது. இவ்வாறு இராணுவத்தினர் வசமுள்ள காணிகளில் ஒரு பகுதி விடுவிக்கப்பட்டுள்ள போதிலும் இன்னும் 54 குடும்பங்களுக்கான காணிகள் இதுவரை விடுவிக்கப்படவில்லை.

இவர்களில் 20 குடும்பங்கள் தமது காணிகளை விடுவிக்குமாறு இராணுவத்தினரிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

எனினும் தமது காணிகள் விடுவிக்கப்படாமையினால் தாங்கள் இன்றும் சொந்த மாவட்டத்திற்குள்ளேயே இடம்பெயர்ந்தவர்களாக அகதி வாழ்வு வாழ்ந்து வருவதாக பரவிபாஞ்சான் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

தமது காணிகள் மீளவும் கிடைக்கும் வரை கவனயீர்ப்பு போராட்டம் தொடரும் எனவும் பரவிப்பாஞ்சான் மக்கள் குறிப்பிடுகின்றனர். அத்துடன் இராணுவத்தினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு பல தடவைகள் அரசியல்வாதிகள் இராணுவம் மற்றும் உயரதிகாரிகளிடம் முறைப்பாடு செய்துள்ள போதிலும் எந்த தீர்வும் கிடைக்கவில்லை என அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

காணி விடுவிக்கப்படும் வரை இந்தப் போராட்டத்தை தாங்கள் இரவு பகலாக தொடர்ந்தும் மேற்கொள்ள இருப்பதாகவும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.