Breaking News

விச ஊசி விவகாரம்: பிரதமரை அவசரமாக சந்திக்கின்றார் முதல்வர் (காணொளி)



சிறிலங்கா இராணுவத்தினரால் புனர்வாழ்வு முகாம்களில் வைத்து விச ஊசி ஏற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் முன்னாள் போராளிகளின் நிலமைகள் தொடர்பில் வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அவசரமாக சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.

இதற்காக கொழும்பு செல்லவுள்ள முதலமைச்சர் விக்னேஸ்வரன் நாளைய தினம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். 

புனர்வாழ்வு முகாம்களில் வைத்து முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியதை அடுத்து விடுவிக்கப்பட்ட 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்னாள் போராளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மத்தியில் மரண பயம் ஏற்பட்டுள்ள நிலையிலேயே வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவசரமாக பிரதமர் ரணிலை சந்திக்க தீர்மானித்திருக்கின்றார்.


முன்னாள் போராளிகளுக்குவிச ஊசி ஏற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்த விசாரணை நடாத்தத் தயார் என அரசாங்கம் அறிவித்துள்ள நிலையிலேயே இந்த சந்திப்பு நாளைய தினம் இடம்பெறவிருக்கின்றது.

இதன்போது முன்னாள் போராளிகளுக்கான மருத்துவ பரிசோதனைகளை துரிதமாக நடாத்துவது குறித்தும் அதன் ஊடாக அவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள மரண பயத்தை நீக்கி நிம்மதியாக வாழ இடமளிப்பது குறித்தும் முதலமைச்சர் கலந்துரையாடவுள்ளார். 

இதேவேளை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு நீண்டகாலமாக சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்தும் முதலமைச்சர் சிறிலங்கா பிரதமருடன் விரிவாக ஆராயவுள்ளார்.