சர்ச்சைக்குரிய விஷ ஊசி விவகாரம்! - ஐவரடங்கிய குழு
முன்னாள் போராளிகளுக்கு ஏற்றப்பட்ட சர்ச் சைக்குரிய விஷ ஊசி விவகாரம் தொடர்பிலான மருத்துவ பரிசோதனை ஆய்வுகளை முன்னெடுப்பதற்கு வைத்திய கலாநிதி சிவன் சுதன் தலைமையிலான ஐவரடங்கிய குழுவொன்றை வட மாகாண சுகாதார அமைச்சு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு பரிந்துரை செய்துள்ளது.
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் புனர்வாழ்விலும் தடுப்பு முகாம்களிலும் இருந்தபோது ஏற்றப்பட்டதாகக் கூறப்படும் சர்ச்சைக்குரிய விஷ ஊசி விவகாரம் தொடர்பாக வடக்கு மாகாண சபையின் 58ஆவது அமர்வில் பிரேரணை நிறைவேற்றப்பட்டிருந்தது.
புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் பலர் நோய்வாய்ப்படுவதுடன் மர்மமான முறையில் மரணமடைவதாக சந்தேகங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் முன்னாள் போராளிகள் அனைவரும் மருத்துவ பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு உண்மைத்தன்மை கண்டறியப்படவேண்டும். இதற்காக அனைத்து மாகாணசபை உறுப்பினர்களும் முன்னாள் போராளிகளின் பெயர்விபரங்களை பதிவுசெய்து தகவல்களை திரட்ட வேண்டுமென வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் சமர்பித்த பிரேரணை அனைத்து உறுப்பினர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டிருந்தது.
இதனையடுத்து சர்வதேச மருத்துவ நிபுணர்கள் அடங்கிய மருத்துவ பரிசோதனையே தேவையாகும் என்ற கருத்துக்களும் வலுப்பெற்றிருந்தன. அதேசமயத்தில் தென்னிலங்கையில் அதற்கு எதிர்ப்புக்களும் வெளியிடப்பட்டிருந்தன. இந்நிலையில் சர்ச்கைக்குரிய ஊசி விடயம் தொடர்பான ஆய்வை மேற்கொள்வதற்கும் அதுதொடர்பிலான ஏனைய செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கும் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனுக்கு ஆலோசனை வழங்குவதற்குமாக வடமாகாண சுகாதார அமைச்சானது யாழ்.வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியகலாநிதி.சிவன் சுதன் தலைமையிலான ஐவர் அடங்கிய நிபுணர்குழுவொன்றை வடக்கு முதல்வர் சி.வி.விக்கினேஸ்வரனுக்கு பரிந்துரை செய்துள்ளது.
இதனையடுத்து வடக்கு முதல்வர் சி.வி.விக்கினேஸ்வரன் ஆளுநர் ரெஜினோல்ட் குரேயின் ஒப்புதலைப்பெற்று குறித்த குழுவின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான அனுமதியை வழங்கவுள்ளதாக தெரியவருகின்றது. அதேநேரம் குறித்த குழுவின் கண்காணிப்பின் கீழாக வடக்கு குழுவின் கண்காணிப்பின் கீழாக வடக்கு மாகாணங்களில் காணப்படும் ஐந்து மாவட்டங்களிலும் தனித்தனியாக வைத்திய நிபுணர்களடங்கிய குழுக்களும் நியமிக்கப்படவுள்ளன.
மேலும், மருத்துவ பரிசோதனைகளை பெற்றுக்கொள்வதற்காக அந்தந்த மாவட்டங்களில் முன்னாள் போராளிகள் தவறாது பதிவுகளை மேற்கொள்ளுமாறும் கோரப்பட்டுள்ளது.








