மீண்டும் போராட தமிழ் அரசியல் கைதிகள் முடிவு
மனிதாபிமானத்தின் அடிப்படையில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் வேறு வழிகள் எதுவுமின்றி சாத்வீக போராட்டத்தில் இறங்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளதாக தமிழ் அரசியல் கைதிகள் அறிவித்துள்ளனர்.
அரசினால் உருவாக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தையும் புறக்கணிப்பு செய்வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், இதனை வேதனையோடு தெரிவித்துக்கொள்வதாகவும் தமிழ் அரசியல் கைதிகள் தமது உறவினர்கள் ஊடாக அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர்.
நல்லாட்சி அரசாங்கத்தின் 8 மாதங்கள் நிறைவடைந்த வேளையிலும் கூட அரசியல் கைதிகளாகிய எமது விடுதலைக்கான முயற்சிகள் எதுவுமே மேற்கொள்ளப்படாத நிலையில் கடந்த ஆண்டு ஒக்ரோபர், நவம்பர் மாதங்களில் நாடு முழுவதிலும் உள்ள 14 சிறைச்சாலைகளிலும் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் ஒன்றிணைந்து உணவு தவிர்ப்ப போராட்டத்தை மேற்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எமது போராட்டத்தின் உணர்வுபூர்வமான தன்மையை உணர்ந்துகொண்ட பல பொது அமைப்புக்கள், ஊடகங்கள் எல்லாம் எமக்கு ஆதரவாக நாடு தழுவிய ரீதியில் பல கண்டனப்பேரணிகளை நடத்தியது மட்டமல்லாமல் வடக்கு, கிழக்கு மகாணங்களில் ழுமுக்கடையடைப்பும் முன்னெடுக்கப்பட்டது.
இதேவேளை தற்காலிக நிவாரணமாக ஒரு சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது. இந்த நீதிமன்றத்தின் செயற்பாடானது எண்ணெய் சட்டியில் இருந்து நழுவி அடுப்பில் விழுந்தது போலானது என குறித்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு நீதிமன்றத்தின் செயற்பாடுகள் தொடர்பில் ஏற்கனவே நாம் சம்பந்தப்பட்ட அரசியல் தலைவர்களுக்கும் அமைச்சர்களுக்கும் சிறைச்சாலை திணைக்களத்தின் ஊடாக தெரியப்படுத்தியுள்ளதாகவும் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.








