Breaking News

பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படாதா?




பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டுமென பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்ற நிலையில், குறித்த சட்டத்தை நீக்குவது தொடர்பில் அரசாங்கம் எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லையென அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்விடயத்தை தெரிவித்தார்.

பயங்கரவாத தடைச்சட்டம் ஏற்புடையதல்லவென அரசாங்கமே தெரிவித்து வரும் நிலையில், அதனை நீக்கி அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் நேற்று முன்தினம் நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் சுவாமிநாதன், குறித்த சட்டத்தை நீக்கி சர்வதேச நியமங்களுக்கு அமைவாக பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டமொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் அதற்கான சகல ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்திருந்தார். இவ்வாறான சந்தர்ப்பத்தில் ராஜித அதற்கு மாறுபட்ட கருத்தை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.