இரகசியத்தைத் தெரிந்துகொள்ள “நாங்களும் காத்திருக்கின்றோம்-அமைச்சர் ராஜித
எல்லா மனிதர்கள் மனதிலும் இரகசியம் இருக்கும் அவை அனைத்தும் வெளிப்படுத்தப்படும் என்று கூற முடியாது. ஜனாதிபதி என்பதை பிரித்துப் பார்த்தால் மைத்திரிபால சிறிசேன என்பவர் தனி மனிதனே அவர் மனதிலுள்ள இரகசியங்களை எம்மால் அறிய முடியாது.
அவர், இரகசியங்களை வெளிப்படுத்தும் போதுதான் தெரியும் நாங்களும் அதற்காக காத்திருக்கின்றோம் என, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு, அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்றுப் புதன்கிழமை நடைபெற்றபோதே அவர் இதனைக் கூறினார்.
‘இணைந்த எதிரணியினர் புதியதொரு கட்சியை உருவாக்குவார்களாயின், இணைந்த எதிரணியில் உள்ள சில அரசியல்வாதிகள் குறித்தான இரகசியத்தை வெளியிடுவேன்’ என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் தெரிவித்த கருத்துத் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனைக் கூறினார்.
‘கூட்டு எதிர்க்கட்சியினர் புதிய கட்சியை உருவாக்குவதென்றால் தற்போது உள்ள பிரதான கட்சியை உடைத்துதானே உருவாக்க வேண்டும். புதிய கட்சி உருவாவது தொடர்பில் எமக்கு பயமில்லை. அவ்வாறு இருந்தால் தானே அவர்களை அழைத்து பேச வேண்டும். புதிய கட்சியை அவர்கள் உருவாக்கட்டும்’ என்றார்.
‘ஜனாதிபதியின் இந்தக் கருத்து புதிய கட்சியை உருவாக்குபவர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கின்றமை போலல்லவா உள்ளது?’ என, ஊடகவியலாளர் ஒருவர் கேட்க ‘ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மனதில் இரகசியம் இருக்கலாம் அது தொடர்பில் எம்மால் கூற முடியாது. இது அச்சுறுத்தல் ஒன்றுமில்லலை தவறு செய்தவர்கள் தொடர்பில் என்றேனும் ஒருநாள் தகவல் வெளிப்பட்டே தீரும். ஆதனை நாங்களும் எதிர்ப்பார்த்துள்ளோம்’ என்றார்.