சாரணிய இயக்கத்தின் அவசியம் தற்போது அதிகம் உணரப்படுகிறது - பொ.ஐங்கரநேசன் - THAMILKINGDOM சாரணிய இயக்கத்தின் அவசியம் தற்போது அதிகம் உணரப்படுகிறது - பொ.ஐங்கரநேசன் - THAMILKINGDOM
 • Latest News

  சாரணிய இயக்கத்தின் அவசியம் தற்போது அதிகம் உணரப்படுகிறது - பொ.ஐங்கரநேசன்  போருக்குப் பின்னரான இன்றைய சூழலில் இளைய தலைமுறையினரிடையே குற்றச் செயல்கள் மலிந்து வருகின்றன. பண்பாட்டுப் பிறழ்வான நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் சாரணிய இயக்கத்தின் அவசியம் தற்போது அதிகம் உணரப்படுகிறது என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.


  யாழ் மாவட்ட சாரணியர் சங்கத்தின் நூறாண்டு நிறைவையொட்டி கனடாவில் வெளியிடப்பட்ட அஞ்சல் தலையின் அறிமுக நிகழ்ச்சி நேற்று செவ்வாய்க்கிழமை (30.08.2016) யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் சபாலிங்கம் அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

  அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 

  உலகில் எத்தனையோ விதமான சங்கங்களும் இயக்கங்களும் இயங்கி வருகின்றன. ஆனால் மழலைகள் முதல் எல்லா வயதுடைய மாணவர்களுக்கும் ஒழுக்கத்தையும் நற்பண்பாட்டையும், கீழ்ப்படிதலையும், பிறருக்கு உதவும் மனப்பாங்கையும், தேசப்பற்றையும் போதிக்கும் இயக்கமாக மிளிர்வது சாரணியர் இயக்கம்தான். பாடசாலையைவிட்டு வெளியே சென்று வெளிக்களப் பயிற்சிகளை வழங்குவதன்மூலம் சாரணிய இயக்கம் மாணவர்களை இயற்கையை நேசிக்கவும் கற்றுத்தருகிறது.

  சாரணர்கள் வாழ்நாள் பூராவும் ஒழுக்க சீலர்களாக, மற்றையவர்களால் போற்றத்தகு மானுடர்களாக வாழ்கிறார்கள். யாழ் இந்துக்கல்லூரியில் பயின்ற எனக்கு சாரணர் என்றவுடன் மனக்கண்ணுக்கு வருபவர் என் பள்ளித்தோழன் ஹரிச்சந்திராதான். பாடசாலையின் சிரே~;ட மாணவத் தலைவராகவும் இருந்த ஹரிச்சந்திரா சாரணியத்தின் அத்தனை நற்பண்புகளின் மொத்த உருவமாக திகழ்ந்தார். பின்னாளில் ராதா என்ற பெயருடன் விடுதலைப்புலிகளில் அவர் இயங்கிய காலத்திலும், சாரணியத்தின் நற்பண்புகள் அவரில் வெளிப்பட்ட காரணத்தினால்தான் எல்லோராலும் நேசிக்கப்பட்ட போராளித் தலைவர்களுள் ஒருவராகவும் உயர்வுபெற்று அவர் விளங்கினார்.

  சாரணியம் உன்னதமான குணங்களையெல்லாம் மனிதர்களில் குடிகொள்ளச் செய்கிறது. அந்தவகையில், பாடசாலையில் பயிலுகின்ற மாணவர்கள் எல்லோரும் சாரணிய இயக்கத்தில் இணைந்து கொள்வதன்மூலம் நன்மானுடர்களாக உயர்வு பெறமுடியும் என்றும் தெரிவித்தார்.

  யாழ்.இந்துக்கல்லூரியின் அதிபர் ஐ.தயானந்தராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் வடமாகாணசபை அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், யாழ் மாவட்ட சாரண ஆணையாளர் செ.தேவரஞ்சன், தேசிய தலைமைக் காரியாலய ஆணையாளர்  ந.சௌந்தரராசன், கனடாவில் இருந்து வருகை தந்திருந்த தேசியப்பயிற்றுநர் இ.ராஜ்குமார் உட்பட சாரணிய அமைப்பின் மூத்த உறுப்பினர்கள் பலரும் பல்வேறு பாடசாலைகளைச் சேர்ந்த சாரணர்களும் கலந்து கொண்டிருந்தார்கள்.  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: சாரணிய இயக்கத்தின் அவசியம் தற்போது அதிகம் உணரப்படுகிறது - பொ.ஐங்கரநேசன் Rating: 5 Reviewed By: Tamilkingdom
  Scroll to Top