ஒக்ரோபருக்குள் உண்மை ஆணைக்குழு – மங்கள
உண்மை ஆணைக்குழுவைத் தொடர்ந்து உள்நாட்டு விசாரணை நீதிமன்றமே நியமிக்கப்படும் என்றும், கலப்பு நீதிமன்றம் அமைக்கப்படாது என்றும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர்,
‘காணாமற்போனோர் தொடர்பாண பணியகம் இன்னும் மூன்று மாதங்களுக்குள் உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உண்மை ஆணைக்குழுவை உருவாக்குவதற்கான சட்டமூலத்தை, வரும் ஒக்ரோபருக்குள் சமர்ப்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
உண்மை ஆணைக்குழுவை உருவாக்கும் சட்டமூலத்தை, வரும் நவம்பர் 10ஆம் நாள் வரவுசெலவுத் திட்டத்தை சமர்ப்பிப்பதற்கு முன்னதாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
அவ்வாறு சமர்ப்பிக்க முடியாது போனால், வரும் ஜனவரியில் அதனை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
உண்மை ஆணைக்குழுவைத் தொடர்ந்து உள்நாட்டு நீதிமன்றப் பொறிமுறை உருவாக்கப்படும்.
அந்த விசாரணைப் பொறிமுறை, கலப்பு நீதிமன்றமாகவோ அனைத்துலக நீதிமன்றமாகவோ இருக்காது.
அது முற்றிலும் உள்நாட்டு நீதிமன்றமாகவே இருக்கும். அது வெளிப்படைத்தன்மை கொண்டதாகவும், மக்களின் நம்பிக்கையைப் பெற்றதாகவும் இருக்கும்.
ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனின் வருகையை முன்னிட்டே, அவசரமாக காணாமற்போனோர் தொடர்பான பணியகத்தை உருவாக்கும் சட்டம் கொண்டு வரப்பட்டதாக வதந்திகள் பரப்பப்படுகின்றன.
இந்தச் சட்டத்தின் உள்ளடக்கம் பற்றி அரசாங்கத்தில் உள்ள எல்லா கட்சிகளும் நன்றாகவே அறிந்துள்ளன.
இந்தச் சட்டம் யாரையும் தண்டிப்பதற்காக கொண்டு வரப்பட்டதல்ல. காணாமற்போனவர்களினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவும் நோக்கிலேயே கொண்டு வரப்பட்டது.” என்றும் அவர் தெரிவித்தார்.