எக்னெலிகொடவை இராணுவப் புலனாய்வுப் பிரிவே கடத்தியது – உயர்நீதிமன்றில் தகவல் - THAMILKINGDOM எக்னெலிகொடவை இராணுவப் புலனாய்வுப் பிரிவே கடத்தியது – உயர்நீதிமன்றில் தகவல் - THAMILKINGDOM
 • Latest News

  எக்னெலிகொடவை இராணுவப் புலனாய்வுப் பிரிவே கடத்தியது – உயர்நீதிமன்றில் தகவல்  சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளாலேயே ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டார் என்பதை, நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாக, மேலதிக சொலிசிற்றர் ஜெனரல் சரத் ஜெயமான்னே சிறிலங்காவின் உயர்நீதிமன்றத்தில் நேற்றுத் தெரிவித்தார்.

  பிரகீத் எக்னெலிகொட கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள, இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த, உபசேன மற்றும் லான்ஸ் கோப்ரல் ரூபசேன ஆகியோர், உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் வழக்கின் மீதான விசாரணையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

  காரணமின்றித் தாம் ஒரு ஆண்டாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக, இவர்கள் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு நேற்று பிரதம நீதியரசர் சிறீபவன் தலைமையிலான மூற்று நீதியரசர்கள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

  இதன்போது மேலதிக சொலிசிற்றர் ஜெனரல் தமது கருத்துக்களை முன்வைத்தார்.

  “ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் கடத்தப்பட்ட பிரகீத் எக்னெலிகொட தொடர்பான எந்தவொரு சிறிய தகவலையும், சிறிலங்கா காவல்துறை கண்டுபிடிக்கவில்லை. ஆட்சி மாற்றத்துக்குப் பின்னரே, இதுபற்றிய தகவல்களைக் கண்டறிவது சாத்தியமானது.

  நாட்டின் பாதுகாப்பு பற்றிய தகவல்களை அளிக்க வேண்டிய புலனாய்வுப் பிரிவினாலேயே இந்தக் குற்றம் இழைக்கப்பட்டுள்ளது.

  முரளி சுவேந்திரன் என்பவர் பிரகீத் எக்னெலிகொடவைச் சந்தித்துள்ளார். அவர் விடுதலைப் புலிகளால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை வைத்திருந்தார். போர் முடிந்த பின்னர் தாம் சரணடைந்த அவரிடம் தொலைபேசி இலக்கங்கள் அடங்கிய ஒரு புத்தகமும் இருந்தது. அதில் நாட்டின் மிக முக்கிய பிரமுகர்களின் தொலைபேசி இலக்கங்கள் இருந்தன.

  எக்னெலிகொடவுக்கு ஹபரணவில் ஒரு காணி இருந்தது. நாதன் எனப்படும் மற்றொருவருடன், முரளி முச்சக்கர வண்டியொன்றில் ஹபரணவில் உள்ள காணியில், எக்னெலிகொடவைச் சந்திக்கச் சென்றார் முரளி. அந்த முச்சக்கர வண்டியை மனுதாரரே ஓட்டிச் சென்றார்.

  அந்தச் சந்தர்ப்பத்தில் அரசியல்தொடர்பாக கடுமையான விவாதங்கள் இடம்பெற்றன. பல அரசியல்வாதிகள் தொடர்பாக எக்னெலிகொட கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். அதற்கான ஆதாரங்கள் உள்ளன. அங்கு சென்ற இரண்டு விருந்தினர்களாலும் தான் இவை பதிவு செய்யப்பட்டுள்ளன.

  அந்தச் சம்பவத்துக்குப் பின்னர், தனது சகோதரர் நாதன் கொழும்பு வருவதாகவும், அவருக்கு உதவுமாறும் எக்னெலிகொடவிடம் கேட்டுக் கொண்டார் முரளி. அதன் பின்னர் இந்த இரண்டு நபர்களும், ராஜகிரியவில் உள்ள எக்னெலிகொடவின் பணியகத்துக்குச் சென்றனர். அவருடன் உரையாடிய பின்னர், அங்கிருந்து வெளியேறினர்.

  அவர்கள் வெளியே வந்த போது இன்னொரு குழுவினர் காத்திருந்தனர். அவர்கள், எக்னெலிகொடவின் கண்களைக் கட்டி, வாகனம் ஒன்றில் ஏற்றினர். அவர் கிரித்தல இராணுவ முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு பல முக்கிய பிரமுகர்களின் ஒளிப்படங்கள் எக்னெலிகொடவுக்கு காண்பிக்கப்பட்டு கேள்விகள் கேட்கப்பட்டன.

  அப்போது, அதிபர் வேட்பாளராகப் போட்டியிட்ட சரத் பொன்சேகாவின் தேர்தல் பரப்புரைக்கு பிரகீத் பொறுப்பாக இருந்தார். பிரகீத் வரைந்த கேலிச்சித்திரம் ஒன்றே, அவர் கடத்தப்படுவதற்கு காரணமாக இருந்தது என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன” என்று குறிப்பிட்டார்.
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: எக்னெலிகொடவை இராணுவப் புலனாய்வுப் பிரிவே கடத்தியது – உயர்நீதிமன்றில் தகவல் Rating: 5 Reviewed By: Tamilkingdom
  Scroll to Top