முதலமைச்சர் நிதியம்; தடையாக தமிழர் பிரதிநிதிகள் – விக்கி (நேர்காணல்)
வடக்கு முதலமைச்சர் என்ற வகையில் நான் ஒன்றுமே செய்யவில்லை என்று யாருமே நினைக்கக்கூடாது. மேலும் வெளிநாட்டில் தற்போது இலங்கைத் தமிழர்களின் பிரச்சினை நன்றாக விளங்கியுள்ளது. வெளிநாட்டில் இருந்து வருகி றவர்கள் எல்லோரும், தமிழர்களுடைய நிலைமை உங்களின் முயற்சியால் எல்லோருக்கும் தெரியவருகிறது என்கின்றார்கள்.
மேலும் வெளிநாட்டிலிருந்து இலங்கை அரசாங்கத்திற்கு தமிழர்களின் விடயங்கள் குறித்து பல நெருக்கடிகள் ஏற்பட்ட வண்ணமேயுள்ளன. ஆகவே, நாங்கள் முதலில் களத்தில் இறங்கி எதையும் செய்யவேண்டும். அதன் பலாபலன்கள் கிடைக்கின்றனவா? இல்லையா? என்பது குறித்து பின்னர் பார்க்கலாம். அதையே நானும் செய்து வருகின்றேன். முதலமைச்சர் நிதியம் குறித்து நான் இன்னும் முழு முயற்சி எடுத்து வருகின்றேன். ஆனால், எங்களுக்குள்ளேயே பல தடங்கல்களை ஏற்படுத்து கின்றவர்கள் இருக்கின்றார்கள் என்பதை மிகவும் மனவருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.
வட மாகாண முதலமைச்சர் நிதியம் எப்பொழுதோ வெற்றியளித்திருக்க வேண்டிய ஒன்றாகும். ஆனால் இதில் சம்பந்தப்ப ட்டவர்கள் ஒன்றிணைந்து ஒத்துழைப்பு வழங்கவில்லை. தமிழருக்கு ஒரு சாபக்கேடு உள்ளது. அது என்னவென்றால், ஒருவர் ஒரு நற்காரியத்தில் ஈடுபடும் பொழுது, மற்றுமொருவர் தன்னுடைய சுய இலாபம் கருதி அவ்விடயத்தை கால தாமதமாக்குவது, பிறருக்கு எதிராக குழி பறிப்பது போன்றவையாகும். இவ்வாறான நடவடிக்கைகள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. என்றாலும் அந்நிதியம் குறித்த முழுமுயற்சியை நான் எடுத்துவருகிறேன்.” என்று வடமாகாண முதல மைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்
இடம்பெயர்ந்த மக்களை பேதம் காட்டி பிரிக்காமல் அவர்களை மக்களாகப் பார்க்கவேண்டும். வடக்கில் தமிழர்கள் பௌத்தமதத்தை பின்பற்றிய காலப்பகுதியிலுள்ள பௌத்த சின்னங்களை வைத்து வடக்கில் பாரம்பரிய சிங்களக்குடி யேற்றங்கள் இருந்ததாக காட்ட முனைகின்றனர். என்றும் அவர் சொன்னார்.
அவருடைய செவ்வி வருமாறு:
கேள்வி: மீள்குடியேற்ற புனர்வாழ்வு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தலைமை யில் வடக்கு, கிழக்கு மாகாணத்தில் மீள்குடியேற்றம் சம்பந்தமாக ஜனாதிபதி குழு வொன்றை நியமித்துள்ளார். இந்த குழுவில் வட மாகாண முதலமைச்சரா கிய நீங்கள் உள்ளடக்கப்படவில்லை. மாறாக வட மாகாண செயலாளரே நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக உங்க ளது கருத்து என்ன?
பதில்: அமைச்சர்களான டி.எம். சுவாமிநாதன், ரிஷாத் பதியூதீன், பைசர் முஸ்தப்பா, ஆகியோரைக் கொண்ட குழு வொன்றை அமைத்து சிங்களம் மற்றும் முஸ்லிம்களின் மீள் குடியேற்ற இடங்கள் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார். மேலும் அதில் ஜனாதிபதி, வடமாகாணத்திலுள்ள பாரம்பரிய சிங்களக் குடியேற்றங்க ளையும் திருகோணமலை மாவட்டத்தையும் உள்ளடக்குமாறு அதில் குறிப்பிட்டுள்ளார். இது நேரடியாக எனக்கு அனுப்பி வைக்கப்படவில்லை. தலைமைச் செயலாளர் இதைக் கொண்டுவந்து என்னிடம் தந்தார். நான் இதைப் பார்த்தவுடன் இதனால் பல பின்விளைவுகள் ஏற்படக் கூடும் என அறிந்துகொண்டு உடனே உரிய அமைச்சர்களிடம் இது குறித்துப் பேசினேன். அவர்கள் இது குறித்து ஒரு சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து அதில் இந்த விடயத்தை நேரடியாகவே பேசுவ தென்று முடிவுக்கு வந்தனர்.
அதாவது இன்னும் எமது தமிழ் மக்கள், தங்களது சொந்த இடங்களில் மீள் குடியேற்றப்படாமலிருக்கும் நிலையில் ஏனை யோரை மீள்குடியேற்றுவது குறித்து எவ்வாறு சிந்திக்கமுடியும்?
மேலும் அதில் பாரம்பரிய சிங்களக் குடியேற்றங்கள் குறித்தும் கவனம் செலுத்தும்படி கூறப்பட்டிருந்தது. வடமாகா ணத்தில் எங்கு பாரம்பரிய சிங்களக் குடியேற்றங்கள் இருந்தன?
ஆரம்பத்தில் வடமாகாணத்தில் தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்து வந்துள்ளார்கள். அவர்கள் வாழ்ந்ததற்காக வரலாற்றுச் சான்றுகள் மற்றும் சின்னங்களும் இங்குண்டு. அதற்குப்பின் பல நூற்றாண்டுகள் கழித்தே இந்த சிங்கள மொழி இங்கு பரவத் தொடங்கியது. இது சம்பந்தமாக பேராசிரியர் சுனில் ஆரியரட்ண “தெமள பௌத்தயோ” என்ற புத்தகமொன்றையும் எழுதியுள்ளார்.
ஆகவே வடக்கில் தமிழர்கள் பௌத்த மதத்தை பின்பற்றிய காலப்பகுதியிலுள்ள பௌத்த சின்னங்களை வைத்து வடக்கில் பாரம்பரிய சிங்களக் குடியேற்றங்கள் இருந்ததாகக் காட்ட முனைகின்றார்கள். இது பின்னர் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று கூறியதை பலர் ஏற்றுக்கொண்டார்கள். சில கருத்துக்களில் எங்களுடன் முரண்படும் சிங்கள உறுப்பினர் கூட, மீள்குடியேற்றம் என்ற விடயத்தில், தமிழ், முஸ்லிம், சிங்களம் என்ற பேதம் பார்க்காது அவர்களை அந்தந்த இடத்தில் மீள்குடியமர்த்துவதே சிறந்தது என்றனர். ஆகவே, எந்தக் காரணத்துக்காக இந்தக்குழுவை அமைத்தார்களோ தெரியவில்லை. ஆனால் நாங்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளோம்.
கேள்வி: இது குறித்து உங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராகவுள்ளதாக அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் கூறியிருந்தாரே?
பதில்: ஆம். பேச்சுவார்த்தை எப்பொழுதும் நடத்தமுடியும். ஆனால் இடம் பெயர்ந்த மக்களை பேதங்காட்டிப் பிரிக்காமல் அவர்களை மக்களாகப் பார்க்க வேண்டும் என்பதே எங்களது நிலைப்பாடு. அத்துடன் இடம்பெயர்ந்த மக்களை அந்தந்த இடங்களில் பேதங்கள் பார்க்காது குடியமர்த்த வேண்டும் என்பது ஐக்கிய நாடுகள் அமைப்பினால் கடைப்பிடிக்கப்படுகின்ற ஒரு கொள்கையாகும்.
கேள்வி: வடமாகாணத்தின் முதலமைச்சர் என்ற வகையில் நீங்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகளை நன்கு அறிந்த ஒருவர். அதனால் நீங்கள் தமிழ் மக்களுக்காக சில கடுமையான நடவடிக்கைகளையும் எடுத்துவருகிறீர்கள். சிலர் நீங்கள் கடும் போக்கில் செயற்படுவதாக விமர்சிக்கின்றார்கள். ஆனாலும் உங்களுடைய முதலமைச்சர் நிதியம் ஆரம்பிப்பது தொடக்கம் இந்தச் செயற்பாடுகள் வரை எந்தளவு தூரம் வெற்றியடைந்துள்ளன?
பதில்: வட மாகாண முதலமைச்சர் நிதியம் எப்பொழுதோ வெற்றியளித்திருக்கவேண்டிய ஒன்றாகும். ஆனால் இதில் சம்பந்தப்பட்டவர்கள் ஒன்றிணைந்து ஒத்துழைப்பு வழங்கவில்லை. தமிழருக்கு ஒரு சாபக்கேடு உள்ளது. அது என்ன வென்றால், ஒருவர் ஒரு நற்காரியத்தில் ஈடுபடும் பொழுது, மற்றுமொருவர் தன்னுடைய சுய இலாபம் கருதி அவ்விட யத்தை காலதாமதமாக்குவது, பிறருக்கு எதிராக குழி பறிப்பது போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர். இவ்வாறான நடவடிக்கைகள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன.
நாங்கள் முன்வைக்கின்ற கோரிக்கையை ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில் கேட்டுள்ளவற்றில் சிலவற்றைக் குறைத்து ஏனையவற்றை கேட்கக் கூடாது. அவசியமானவை களைக் கேட்கவேண்டும். அவர்கள் ஒரு வேளை தராவிட்டால் அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்கலாம்.
அதேவேளை வடக்கு முதலமைச்சர் என்ற வகையில் நான் ஒன்றுமே செய்யவில்லை என்று யாருமே நினைக்கக்கூடாது. மேலும் வெளிநாட்டில் தற்போது இலங்கைத் தமிழர்களின் பிரச்சினை நன்றாக விளங்கியுள்ளது. வெளிநாட்டில் இருந்து வருகிறவர்கள் எல்லோரும், தமிழர்களுடைய நிலைமை உங்களின் முயற்சியால் எல்லோருக்கும் தெரியவருகிறது என்கின்றார்கள். மேலும் வெளிநாட்டிலிருந்து இலங்கை அரசாங்கத்திற்கு தமிழர்களின் விடயங்கள் குறித்து பல நெருக்க டிகள் ஏற்பட்ட வண்ணமேயுள்ளன.
ஆகவே, நாங்கள் முதலில் களத்தில் இறங்கி எதையும் செய்யவேண்டும். அதன் பலாபலன்கள் கிடைக்கின்றனவா? இல்லையா? என்பது குறித்துப் பின்னர் பார்க்கலாம். அதையே நானும் செய்து வருகின்றேன். முதலமைச்சர் நிதியம் குறித்து நான் இன்னும் முழு முயற்சி எடுத்து வருகின்றேன். ஆனால் எங்களுக்குள்ளேயே பல தடங்கல்களை ஏற்படுத்து கின்றவர்கள் இருக்கின்றார்கள் என்பதை மிகவும் மனவருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இதனால் தான் தாம தங்கள் ஏற்படுகின்றன. எங்களுடைய மக்கள் எதையும் செய்யட்டும் என்று நாங்கள் வாயை மூடிக்கொண்டிருக்க முடி யாது. அத்துடன் அரசாங்கத்தையும் நாங்கள் எந்நேரமும் குறை சொல்லிக்கொண்டிருக்கவும் முடியாது. அத்துடன் எங்கள் அழுத்தங்களால் காணிகள் கொஞ்சம் கொஞ்சமாக விடுவிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இராணுவப் பிரசன்னம் குறைக்கப்பட்டு வருகின்றது. ஆகவே முன்னேற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டேயிருக்கின்றன.
கேள்வி: அண்மையில் 201 ஏக்கர் நிலம் விடுவிக்கப்பட்டுள்ளது? அந்த நிலப்பரப்பிலுள்ள கிட்டத்தட்ட அறுபது வீடுகளில் பொலிஸார் நிலை கொண்டிருக்கின்றனர். அந்த பொலிஸார் அந்த அறுபது வீடுகளுக்கும் காணி உறுதி கொண்டுவரும்படி கேட்டிருக்கின்றார்கள். அறுபது வீடுகளையும் விடுவிப்பதற்காக காணி உறுதி கேட்பதற்கு பொலிஸாருக்கு என்ன அதி காரம் இருக்கிறது? இது குறித்து தாங்கள் கவனம் வெலுத்தவில்லையா?
பதில்: ஆம். இதுகுறித்து நான் கட்டாயமாகப்பேசவேண்டும். இன்னும் உத்தியோகபூர்வமாக அது குறித்து தெரியவர வில்லை. அந்த மக்களிடம் காணி உறுதி இருக்கின்றதா? இல்லையா? என்று கேட்பதற்கு சிவில் அதிகாரிகளுக்கே அதி காரம் உண்டு. பொலிஸார் குடியிருக்கவேண்டுமானால் அரசாங்க காணிகள் உண்டு. அங்கு சென்று வீடுகளை அமைத்து குடியிருக்கலாம். அதைவிட்டு பொதுமக்கள் கைவிட்டுச் சென்ற வீடுகளில் குடியிருந்துகொண்டு அவர்களிடம் காணி உறுதிப்பத்திரத்தை எவ்வாறு கேட்கமுடியும்?
கொடூர யுத்தத்தின்போது வீட்டை விட்டு உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஓடியவர்கள் காணி உறுதிப் பத்திரத்தை யும் எடுத்துக் கொண்டா செல்வார்கள்? இது அனைவருக்கும் தெரிந்த விடயம். அவர்களுடைய காணி உறுதியைப்பற்றி காணி ஆணையாளர் நடவடிக்கை எடுப்பார். இதையே சாட்டாக வைத்துக்கொண்டு பொலிஸாராகவோ அல்லது வேறு யாராகவோ இருந்தாலும் பொதுமக்கள் காணிகளிலும் வீடுகளிலும் அத்துமீறி குடியிருப்பது தவறானதாகும்.
கேள்வி: இன்னமும் இந்த அவலம் தொடர்ந்த வண்ணம் உள்ளது. ஆகவே இது குறித்து யார் நடவடிக்கை எடுப்பது? இதற்கு என்ன தான் தீர்வு?
பதில்: இது தொடர்பில் ஆளுநரின் பிரதிநிதி சில நடவடிக்கை எடுத்துக்கொண்டிருக்கின்றார். அவர்களுக்கிடையே கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்று வருகின்றன.
கேள்வி: முதலமைச்சர் நிதியம் அமைக்கப்பட்டால் அந்த நிதியத்திற்கு புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகளிடமிருந்து நிதி திரட்டப்பட்டு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் தொழிற்சாலைகள் அமைக்கப்படுமா?
பதில்: எம்மிடம் அந்த எதிர்ப்பார்ப்பு உள்ளது. ஆனால் அது எந்தளவிற்கு சாத்தியப்படும் என்று தெரியவில்லை. எவ்வாறெ னினும் நாம் இது தொடர்பில் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
கேள்வி: புலம்பெயர் தமிழ் அமைப்புக்களிடம் நிதி திரட்டுதலில் போட்டித்தன்மை நிலவுகின்றது. மத்திய அரசும் புலம்பெயர் தமிழ் அமைப்புகளிடம் நிதிகோரி பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருகின்றது. பிரதமர் சமீபத்தில் சிங்க ப்பூர் சென்று இதுகுறித்து பேச்சுவார்த்தை மேற்கொண்டிருந்தார். மற்றும் மங்கள சமரவீர இலண்டனிலுள்ள தமிழ் அமைப்பிடம் சென்று நிதி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இது தொடர்பில் உங்களுடைய நிலைப்பாடு என்ன?
பதில்: தமிழ் மக்களுக்கு கிடைக்கவேண்டியவற்றை தாம் பெற்றுக்கொள்ள பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுவருகிறது. இது எங்களுக்குத் தெரியும். நான் வடமாகாணத்திற்கு முதல்வராக வந்த போது ஜேர்மனியிலி ருந்து ஒருவர் வடமாகாணத்தில் முதலீடு செய்ய முன்வந்தபோது மத்திய அரசின் பிரதிநிதியொருவர் குறுக்கிட்டு நீங்கள் என்ன வட மாகாணத்திற்கு மாத்திரம் முதலீடு செய்கின்றீர்கள். மத்திய அரசும் இருக்கின்றதல்லவா? ஆகையால் எமக்கு 40சதவீதம் வரை முதலீடு செய்துவிட்டு மிகுதியை வடமாகாணத்திற்கு கொண்டுசெல்லலாமென பேரம் பேசியுள்ளார்.
அதற்கு பின்னர் அந்த முதலீடு கம்போடியா நாட்டுக்கு சென்றுவிட்டது. எனவே இவ்வாறு போட்டி, பொறாமை தொடர்ந்தால் நாட்டில் நல்லெண்ணம் மலராது.
கேள்வி: வட மாகாணத்தில் வேலையில்லாப் பட்டதாரிகளின் பிரச்சினை நாளுக்கு நாள் தொடர்ந்தவண்ணம் உள்ளது. சமீபத்தில் கூட வடமாகாண சபைக்கு முன்னால் போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர். இது தொடர்பில் உங்களு டைய நிலைப்பாடு என்ன?
பதில்: உண்மையில் அவர்கள் பாவம். அவர்களுக்கும் பலவிதமான பிரச்சினைகள் இருக்கின்றன. கடந்த காலங்களிலி ருந்தே யாழ்ப்பாணத்தில் வேலையில்லாப் பட்டதாரிகள் தங்களுக்கு உரிய வேலைவாய்ப்புகள் இன்றி தவித்து வரு கின்றார்கள். எனினும் அவர்களது தகைமைக்கு ஏற்ற வகையில் வேலைவாய்ப்புகள், வெற்றிடங்கள் இருக்கவேண்டும். நாம் இதற்காக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். எனினும் எமக்கான நெறிப்படுத்தல்கள் மத்திய அரசிட மிருந்து கிடைக்கவில்லை.
கேள்வி: பட்டதாரி ஆசிரிய வெற்றிடங்கள் யாழ். குடாநாட்டு பாடசாலைகளில் இருக்கின்றனவா?
பதில்: சில இடங்களில் வெற்றிடங்கள் இருக்கின்றன. அது தொடர்பில் நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். முழுமையாக எந்தளவுக்கு வெற்றிடங்கள் இருக்கின்றன என்பது தொடர்பில் எனக்கு சரியாகத் தெரியாது. அது தொடர்பில் தகவல்க ளைப் பெற்றுக்கொள்ளவும் நடவடிக்கை எடுத்துள்ளேன். முழுமையாக காணப்படும் வெற்றிடங்கள் தொடர்பில் அறிந்து கொண்ட பின்னர் அந்த வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை நியமிப்பது குறித்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
ஆனால் இதில் ஒரு பிரச்சினை இருக்கின்றது. சிற்சில பிரதேச பாடசாலைகளில் அளவுக்கு அதிகமாக ஆசிரியர்கள் பணியில் இருக்கின்றார்கள். சில இடங்களில் குறைவாக இருக்கின்றார்கள். அங்கு பட்டதாரிகளை பணிக்கு அனுப்பி னால், அது பின்தங்கிய கிராமம், அங்கு இருப்பதற்கு உரிய வசதிகள் இல்லை, போக்குவரத்து வசதிகள் இல்லை இப்படி ஏதாவது காரணத்தை சொல்லி அனைவரும் தயங்கி நிற்கின்றார்கள். ஆகவே இங்கு பலவிதமான பிரச்சினைகள் இருக்கி ன்றன. தற்போது இவ்வாறு போராடி வருபவர்களும் வேலை கிடைத்தவுடன் வேலை சரியில்லை என்று ஏதாவது ஒரு காரணம் கூறுகின்றார்கள். உண்மையில் இங்கு உள்ளூர் கிராமங்களில் ஆசிரிய வெற்றிடங்கள் இருக்கின்றன. அந்த வெற்றிடங்களை நிரப்ப வேண்டிய அவசியம் எமக்கு இருக்கின்றது. அது தொடர்பிலும் நாம் நடவடிக்கையெடுத்து வரு கின்றோம்.
கேள்வி: கடந்த காலங்களில் அரசியல் ரீதியாக, கட்சி ரீதியாக, பல்வேறு சவால்களை எதிர்கொண்டிருந்தீர்கள். இது தொடர்பில் உங்களைப் பற்றிய விமர்சனங்கள் பரவலாக எழுப்பப்பட்டன. மக்களிடையேயும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. தற்போது அவ்விமர்சனங்களையெல்லாம் எதிர்கொண்டு வெற்றி கண்டுள்ளீர்களா? அதுபற்றி கூறமுடியுமா?
பதில்: நான் இவற்றை வெற்றி, தோல்வியென்று பார்ப்பதில்லை. என்னை சிலர் நண்பர்களாக பார்க்கின்றார்கள், சிலர் எதிரிகளாகப் பார்க்கின்றார்கள். ஆனால் நான் யாரையும் நண்பர்களாகவோ அல்லது எதிரிகளாகவோ பார்ப்பதில்லை. அனைவரையும் மனிதர்கள் என்ற வகையில் அரவணைத்துக்கொண்டே செயற்பட்டு வருகின்றேன். என்னை எதிரியாகப் பார்ப்பவரிடமும் நான் நன்றாக பேசிப் பழகுகின்றேன். யார் என்மீது பழி சுமத்தினாலும் விமர்சனங்களை கூறினாலும் நான் அவற்றை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்வதில்லை. இதுவே என்னுடைய சுபாவம்.
இதுவரை காலமும் சிலர் தமது சுய நலன்களுக்காக நடவடிக்கைகளை மேற்கொண்டுவந்ததும் உண்மை. நான் பொது நன்மைக்காக நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்தமையும் உண்மை. இந்த விவகாரங்களின் மூலமாக பலரிடையே சில கருத்து வேறுபாடுகள், முரண்பாடுகள் வந்ததும் உண்மை. எனக்குரிய காலம் வரும் வரை என்னுடைய போக்கில் நான் போய்க்கொண்டு இருப்பேன். என்னிடம் சுயநலம் இல்லை. என்னிடம் எல்லாமே இருக்கின்றது. எனக்கு இந்த உலகில் எதுவுமே தேவையில்லை. ஆகவே சுயலாபம் கருதி நான் தனித்து எதையும் செய்யப்போவதில்லை. மக்களின் நலன் கருதி அவர்களுக்கு வேண்டியதை சிந்தித்து அவர்களுக்காக செயற்பட்டு வருகின்றேன்.
கேள்வி: ஏனைய மாகாண சபைகளின் எதிர்க்கட்சி தலைவர்களை விட வட மாகாண சபையின் எதிர்க் கட்சித் தலைவர் உங்களுடன் சுமுகமான போக்கை கடைப்பிடித்து வருகிறார். அத்துடன் பலவிடயங்களில் நீங்கள் இருவரும் ஒத்த கருத்துக்களையே கொண் டிருக்கின்றீர்கள். இது சம்பந்தமாக நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
பதில்: இது எமக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதமாகும். நான் ஏதாவது தவறிழைத்தால் அவர் அது குறித்து சுட்டிக் காட்டுவார். அது அவருடைய கடமை. அதேசமயம் அவருடன் சில விடயங்களில் முரண்படுவதும் உண்மை. ஆனால் கொள்கை தொடர்பாகவோ தமிழ் மக்கள் நலன் தொடர்பாகவோ எம்மிருவரிடையே கருத்து முரண்பாடுகள் இருந்ததில்லை. அதனாலேயே நாம் எடுக்கும் சில முடிவுகளுக்கு அவர் பூரண ஆதரவைத் தருகிறார். கட்சி ரீதியாக எமக்கிடையே முரண்பாடுகள் இருந்தாலும் வடமாகாண மக்களின் வருங்காலம் சம்பந்தமாக கொள்கை ரீதியாக எங்களுக்குள் சிறந்த புரிந்துணர்வு இருக்கின்றது.
நன்றி: வீரகேசரி







