இனரீதியான அநீதி குறித்த அமர்வில் இலங்கை தொடர்பில் மீளாய்வு
ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நாளை செவ்வாய்க்கி ழமை முதல் எதிர்வரும் 28ஆம் திகதி வரை நடைபெறவுள்ள, இனரீதியான அநீதியை ஒழித்தல் தொடர்பான கூட்டத்தொடரில் எதிர்வரும் 15 மற்றும் 16ஆம் திகதிகளில் ஸ்ரீலங்கா குறித்த மீளாய்வு இடம்பெறவுள்ளது.
இந்த அமர்வில் ஸ்ரீலங்கா சார்பில், ஜெனிவா மனித உரிமை பேரவைக்கான ஸ்ரீலங்கா தூதுவர் ரவிநாத ஆரியசிங்க தலைமையிலான குழுவினர் கலந்துகொள்ளவுள்ளதுடன் ஸ்ரீலங்கா குறித்து எழுப்பப்படும் கேள்விகளுக்கும் பதிலளிக்கவுள்ளனர்.
அத்துடன் சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் வெளிவிவகார அமைச்சு ஆகியவற்றின் உயர் அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தொடரில் கலந்துகொள்ளவுள்ளனர்.
இனரீதியான அநீதியை ஒழித்தல் தொடர்பான குழுவில் 17 நாடுகள் அங்கம் வகிப்பதுடன், அதில் ஸ்ரீலங்காவும் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் நாளை முதல் எதிர்வரும் 26ஆம் திகதி வரை இந்த நாடுகள் தொடர்பான மீளாய்வு இடம்பெறவுள்ளது.
அந்தவகையில் 15 மற்றும் 16ஆம் திகதிகளில் ஸ்ரீலங்கா குறித்த மீ்ளாய்வு இடம்பெறவுள்ளது.
மேலும் சர்வதேச மனித உரிமை நிறுவனங்கள், சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்கள் என்பனவற்றின் பிரதிநிதிகளும் சாட்சியமளிக்கவுள்ளனர். அத்துடன் ஸ்ரீலங்கா குறித்து மேலும் மூன்று சிவில் சமூக நிறுவனங்கள் தமது சமர்ப்பணங்களை இனரீதியான அநீதியை ஒழித்தல் தொடர்பான குழுவிடம் கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.