வடக்கு முதல்வர் இனவாத கருத்துக்களை பரப்புகிறார்: பொதுபலசேனா குற்றச்சாட்டு
தமிழ் மக்களின் அபிலாசைகள் மற்றும் எதிர்ப்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் வட மாகாண முதலமைச்சர், சீ.வி. விக்னேஸ்வரன் இனவாத கருத்துக்களை பரப்பி வருவதாக பொதுபல சேனா அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
வட மாகாணத்தில் சிங்கள மக்களை குடியேற்றக்கூடாது என்ற வடமாகாண முதலைமைச்சரின் கருத்தானதுஇ அவரது அரசியல் வங்குரோத்து நிலையை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளதென அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
பொதுபல சேனா அமைப்பின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், வடமாகாண முதலமைச்சர் நாட்டின் அரசியல் யாப்பை மதித்து செயற்படவில்லை எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
வடக்கிலும் கிழக்கிலும் சிங்களவர்களுக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் பெரும்பான்மையின சிங்கள மக்கள் தொடர்பில் ஏற்றுக்கொள்ள முடியாத தேவையற்ற கதைகளை பரப்பி வருகின்றார்.
அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டிய அரசியல் யாப்பு ஒன்று காணப்படுகின்றது. அதனை சிங்கள மக்கள் அல்லது சிங்களத் தலைவர்கள் மாத்திரமா மதித்து நடக்கவேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது. வட மாகாண முதலமைச்சரின் அரசியல் வங்குரோத்து நிலையை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது.
தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்காக தொடர்ச்சியாக அவர் இனவாத கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார். வடக்கில் சிங்களவர்களை குடியேற்றினால் அது மிகப்பெரிய பிரச்சினையாக உருவாகும் என்கிறார். வடக்கிலிருந்து இராணுவத்தை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்கிறார்.
மொரகஹாகந்த நீர்ப்பாசன திட்டத்தில் நீருக்கான உரிமை வேண்டும். இவ்வாறு பல விடயங்களை கூறிவருகின்றார். நாட்டின் தென்பகுதியையோ அல்லது கொழும்பையோ அறிந்திராத ஒருவரைப்போலவே அவர் கதைக்கின்றார். வடக்கில் உருவாகியிருக்கும் இவ்வாறான இனவாதத்தை தோற்கடிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, வெளிமாவட்ட மக்களை வட மகாணத்தில் குடியேற்றுவதால் தமிழ் மக்களின் தனித்துவம் பாதிக்கப்படுமென வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்திருந்தார்.
கடந்த மாதம் 29ஆம் திகதி கனேடிய வெளிவிவகார அமைச்சரை தமது அலுவலகத்தில் சந்தித்த வட மாகாண முதலமைச்சர், அதன் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இந்த விடயத்தை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.








