Breaking News

பரவிபாஞ்சானில் இராணுவத்தினர் வசமுள்ள காணியில் ஒரு பகுதி விடுவிப்பு



இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலுள்ள கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் பிரதேசத்திலுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கடந்த காலங்களில் மக்கள் பல போராட்டங்களை முன்னெடுத்து வந்திருந்த நிலையில், அவர்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் அளித்த வாக்குறுதியின் பிரகாரம் இன்று (புதன்கிழமை) ஒரு தொகுதி காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக கிளிநொச்சி அரசாங்க அதிபர் காரியாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இராணுவத்தின் தேவைக்காக பயன்படுத்தப்பட்டு வந்த சுமார் மூன்றரை ஏக்கர் காணியே இன்றைய தினம் விடுவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி பரவிப்பாஞ்சான் மக்கள் கடந்த காலங்களில் சுழற்சிமுறையில் கட்டம் கட்டமாக தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வந்திருந்த நிலையில், சுமார் 4 ஏக்கர் காணியே விடுவிக்கப்பட்டிருந்தது. எனினும் தமது காணியை முழுமையாக விடுவிக்க வேண்டுமென கடந்த 13ஆம் திகதியிலிருந்து இரவுபகலாக அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதனையடுத்து கடந்த 17ஆம் திகதி பரவிப்பாஞ்சான் பிரதேசத்திற்குச் சென்றிருந்த எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் இரண்டு வாரங்களுக்குள் தீர்வினை பெற்றுத்தருவதாக அறிவித்திருந்தார். அவர் வழங்கிய இரண்டு வார கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகின்ற நிலையில், இன்றைய தினம் ஒரு தொகுதி காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.