Breaking News

முதல்வருக்கெதிராக மக்களை திருப்பிய சிவமோகன்(படங்கள்)

முல்லைத்தீவு மாவட்டத்தில் பிரதேச
ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்துக்கு வருகைதந்த அதிகாரிகள் அமைச்சர்களைத் திசைதிருப்பு முகமாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரது ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம் ஒன்று புதுக்குடியிருப்பு,கரைதுறைப்பற்று, ஒட்டுசுட்டான் பிரதேச செயலகங்களுக்கு முன்பு இன்று (19.09.2016) நடத்தப்பட்டுள்ளது.

வடக்குமாகாண முதலமைச்சருக்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதாக பின்னர் கிடைத்த தகவல்கள் தெரிவித்தன.
குறிப்பாக மீள் குடியேற்ற அமைச்சரால் வழங்கப்படவிருந்த பொருத்து வீடு குறித்து ஆட்சேபனை தெரிவித்த வகையில் முதலமைச்சர் குறித்த வீடுகளை தமிழ்மக்களுக்கு கிடைக்கவிடாது செய்துள்ளார் என்ற பாணியிலேயே இந்த ஆர்ப்பாட்டத்தை குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஏற்பாடு செய்திருந்ததாகவும் தெரியவருகிறது.

ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்துக்கு வரும் அதிகாரிகளிடம் வீட்டுத்திட்டம் குறித்து கலந்துரையாடவேண்டும் எனத் தெரிவித்தே வீட்டுத்திட்டம் கிடைக்காத மக்களை வரவழைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.



“அரச அதிகாரிகளே வீட்டுத்திட்டத்தில் பாகுபாடு காட்டாதீர்கள்”
“வீட்டுத்திட்டத்தை அனைவருக்கும் பெற்றுத்தா”
“மீள்குடியேற்ற அமைச்சரே மீள்குடியேறிய எமக்கு வீடு வேண்டும்”
உள்ளிட்ட வார்த்தைகள் எழுதப்பட்ட அட்டைகளைத் தாங்கிநின்றனர்.
இவ்வாறான வாசகங்களுக்கிடையே அதிகமாக “முதலமைச்சரே வரும் வீட்டுத்திட்டத்தை தடை செய்யாதே”
“முதலமைச்சரே வீட்டுத்திட்டத்தை தடைசெய்யாதே”

என்ற வாசகங்களையே பலரும் அதிகம் தாங்கிநின்றனர்.
வன்னி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரான குறித்த நிகழ்வின் ஏற்பாட்டாளரான சிவமோகன் பின்னணியில் இருந்தபோதும் இறுதியில் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தியை அவ்விடத்திற்கு அனுப்பி மக்களுடன் கலந்துரையாடி கலைத்து செல்லவும் பணித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.