தொடர்கிறது அரசியல் கைதிகளின் போராட்டம்
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள தம்மை விடுவிக்குமாறு வலியுறுத்தி அநுராதபுரம் சிறைச்சாலையிலுள்ள கைதிகள் முன்னெடுத்துவரும் உண்ணாவிரத போராட்டம் ஐந்தாவது நாளாக இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) தொடர்கிறது.
பல வருட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தம்மை பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய வேண்டுமென கோரியுள்ள தமிழ் அரசியல் கைதிகள், தாம் சம்பந்தப்பட்ட வழக்குகளை தமிழ்ப் பிரதேசங்களுக்கு மாற்றவேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமது விடுதலை குறித்து அரசியல் கைதிகள் இதற்கு முன்னரும் பலதடவை உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்து வந்திருந்த நிலையில், தமக்கு உரிய தீர்வு கிடைக்காத நிலையில் மீண்டும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், தமிழ் அரசியல் கைதிகளுக்கு புனர்வாழ்வளித்து விடுதலை செய்வதற்கு சட்டமா அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக மீள்குடியேற்ற மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்திருந்தார். எனினும் குறித்த கைதிகளுக்கு இதுவரை எவ்வித வாக்குறுதிகளும் வழங்கப்படாத நிலையில் போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர்.