பிரபாகரனை கண்டுபிடிக்க தமக்குள்ளே முரண்பட்டது இராணுவம்!
இறுதிக்கட்ட யுத்தத்தின்போது விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை நந்திக்கடலில் இடம்பெற்ற சமரில் விஜயபா காலாற்படையணி கொன்றுவிட்டதாக அண்மையில் ஓய்வுபெற்ற இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன குறிப்பிட்டிருந்த நிலையில், தன்னால் உருவாக்கப்பட்ட பிரிகேடியர் ரவிப்பிரிய தலைமையிலான படையணியே பிரபாகரணை கொன்றதென முன்னாள் இராணுவ தளபதியான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன அண்மையில் எழுதி வெளியிட்டிருந்த ‘நத்திக்கடலுக்கான பாதை’ எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ள யுத்தகால சம்பவங்களுடன் பெரிதும் முரண்படும் சரத் பொன்சேகா, இவ்விடயத்தை சிங்கள ஊடகமொன்றிடம் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக பிரபாகரனை யார் பிடிப்பதென்ற போட்டித்தன்மை இராணுவத்தின் தலைமை அதிகாரிகளுக்கு இடையே காணப்பட்டுள்ளது. குறிப்பாக கமால் குணரத்ன மற்றும் சவேந்திர சில்வா ஆகியோர் விடுதலைப் புலிகள் பதுங்கியிருந்த இடத்தில் போராடுவதற்கான சந்தர்ப்பத்தை தருமாறு கோரியதாகவும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
எனினும் ஆரம்பம் முதலே பிரிகேடியர் ரவிப்பிரிய தலைமையிலான படையணியே பிரபாகரன் மற்றும் அவரை சூழ்ந்திருந்த விடுதலைப் புலிகளுடன் போராடி வெற்றிகொண்டதாக சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
கமால் குணரத்னவின் நூலை பொறுத்தவரை இராணுவத்திற்கு விடுதலைப் புலிகள் எந்தளவு சவாலாக காணப்பட்டனர் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் குறித்த நூலின் அடிப்படையில் இலங்கை இராணுவத்தினர் யுத்த குற்றத்தில் ஈடுபடவில்லை என நிரூபிப்பதற்கான ஆதாரங்களையும் அரசாங்கம் திரட்டி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், யுத்தத்தின் உண்மையான விடயங்களை தாங்கி விரைவில் தானும் ஒரு நூலை வெளியிடவுள்ளதாக சரத் பொன்சேகா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.