Breaking News

மலேஷிய சம்பவத்தால் பயன்பெறுவது மஹிந்தவே!



மலேஷியாவில் இலங்கை உயர்ஸ்தானிகர் தாக்கப்பட்டது போன்ற சம்பவங்களால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கே பலன் கிடைக்கும் என, அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

வடக்கில் இனவாதிகள் வாய் திறக்கும் போது, தெற்கில் உள்ள இனவாதிகளுக்கு அது சாதகத்தை கொடுக்கும் எனவும், தெற்கில் உள்ள இனவாதிகளின் செயல்கள் வடக்கில் உள்ள இனவாதிகளுக்கு சாதகத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் எனவும் சுட்டிக்காட்டிய அவர், இந்த இரு தரப்பினரும் பரஸ்பரம் இணக்கத்துடன் இருப்பதாகவும் கூறினார்.

இந்த நிலைமை நாட்டுக்கு வெளியிலும் பரவியுள்ளது என்பது மலேஷிய சம்பவத்தின் மூலம் தெளிவாகியுள்ளது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு உச்ச தண்டனையை வழங்க வேண்டும் எனவும் மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னரும் இப்படியான சம்பவங்கள் நடந்துள்ளன என குறிப்பிட்ட அவர், அமெரிக்காவில் இலங்கையின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு கன்னத்தில் அறைந்தமை மற்றும், இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி இலங்கை வந்திருந்த போது கடற்படை வீரர் ஒருவர் துப்பாக்கியினால் தாக்கியமை போன்றவற்றையும் நினைவுபடுத்தினார்.