Breaking News

அச்சுவேலி கொலைகள் – லெப்.கேணல் உள்ளிட்ட 5 இராணுவத்தினருக்கு விளக்கமறியல்

அச்சுவேலியில் 1998ஆம் ஆண்டு இரண்டு பொதுமக்களைச் சுட்டுக் கொன்ற வழக்கில், அச்சுவேலி இராணுவ முகாம் பொறுப்பதிகாரியாக இருந்த லெப்.கேணல் தர அதிகாரி உள்ளிட்ட 5 சிறிலங்கா இராணுவத்தினரை,  விளக்கமறியலில் வைக்க யாழ்.மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


அச்சுவேலி இராணுவ முகாமைச் சேர்ந்த சிறிலங்கா இராணுவத்தினரால், 1998ஆம் ஆண்டு இரண்டு பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டமை தொடர்பாக, சிறிலங்கா இராணுவக் காவல்துறையினரால், அச்சுவேலி காவல்நிலையத்தில் முறையிடப்பட்டது.

குற்றவியல் சட்டக்கோவையின் 296ஆவது பிரிவின் கீழ்,  சந்தேக நபர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர, சட்டமா அதிபர், சிறிலங்கா காவல்துறையினருக்கு உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து. சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் அச்சுவேலி இராணுவ முகாமில் பணியாற்றிய 16 சிறிலங்கா படையினரை நீதிமன்றத்தில் நிறுத்துமாறு சிறிலங்கா காவல்துறையினருக்கு பணிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில், 16 சந்தேக நபர்களும் நேற்று யாழ். மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிவான் சதீஸ்கரன் முன்னிலையில் நிறுத்தப்பட்டனர்.

இதையடுத்து லெப்.கேணல் தர அதிகாரி உள்ளிட்ட 5 சிறிலங்கா இராணுவத்தினரை எதிர்வரும் ஒக்ரோபர் 10ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதிவான், ஏனைய 11 சந்தேக நபர்களையும் ஒக்ரோபர் 10ஆம் நாள் முன்னிலையாக வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.