மூனுடனான சந்திப்பு தமிழர் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும்: சம்பந்தன்
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ-மூனுக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இடையே இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ள சந்திப்பானது தமிழர் வாழ்வை முன்னேற்றமடையச் செய்யும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாக அமையும் என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம், பான் கீ மூனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இன்று யாழ்ப்பாணத்தில் சந்திக்கவுள்ள நிலையில் இச்சந்திப்பு தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே எதிர்க்கட்சி தலைவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் இலங்கையில் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட காலத்திலும் இலங்கையில் நல்லாட்சி உருவாக்கப்பட்ட பின்னரும் இன்றுவரை பதவியிலிருப்பவர்.
2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த காலப்பகுதியில் முதன்முறையாக இலங்கை வந்திருந்த பான் கீ-மூன், தற்போது இரண்டாவது முறையாக இலங்கை வந்துள்ளார். அவருடனான எமது சந்திப்பானது முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் பெறுமதிமிக்கதாகவும், வரலாற்று பதிவை உருவாக்கும் சந்திப்பாகவும் அமையும்.
பான் கீ மூன் விரைவில் தனது பதவியிலிருந்து ஓய்வுபெற இருக்கிறார். ஐ.நா. செயலாளர் நாயகம் என்ற வகையில் இலங்கைக்கான விஜயம் மிகவும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இதன்போது, அரசியல் தீர்வு, நீதிப் பொறிமுறை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து பேசப்படவுள்ளது. அதன்படி இச்சந்திப்பு முக்கியத்துவம் உடையதாகவும், வரலாற்று பெறுமதியுடையதாகவும் அமையும் என்றார்.