Breaking News

'எழுக தமிழ்' என்ற முழக்கத்துடன் நிறைவு பெற்றது பேரணி



தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற 'எழுக தமிழ்' மாபெரும் பேரணி பல்லாயிரக்கணக்கான மக்களின் ஆதரவுடன் எழுக தமிழ் என்ற கோசத்துடன் நிறைவுபெற்றுள்ளது.

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் எவ்வித அரசியல் சார்புமின்றி, தமிழ் மக்களின் நலனை மாத்திரம் முன்னுரிமைப்படுத்தி இடம்பெற்ற இந்த பேரணியானது, நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலில் இருந்தும் - யாழ். பல்கலைக்கழக முன்றலில் இருந்தும் காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகி யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தைச் சென்றடைந்தது.

முற்றவெளியைச் சென்றடைந்த பேரணியின் ஆரம்பத்தில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் முன்னாள் போராளி ஆகியோர் பொதுச் சுடர் ஏற்றியதைத் தொடர்ந்து தமிழ்த் தாய் வாழ்த்துடன் பேரணியின் இறுதிக்கூட்டம் ஆரம்பமாகியது.

இந்த பேரணியில் வடமாகாணத்தின் ஏனைய மாவட்டங்களிலிருந்தும் மக்கள் பங்கேற்றிருந்ததுடன், தமது பிரச்சினைகளை சர்வதேசத்திற்கு எடுத்துரைக்கும் வகையில் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளைத் தாங்கியவாறு கோசங்களை எழுப்பி பேரணியில் கலந்து கொண்டனர்.

பேரணியில் வடமாகாண முதலமைச்சர் தலைமையில், வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், வடமாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனிஸ்வரன், வடமாகாண சபை உறுப்பினர்கள், பொது அமைப்புக்கள், மதகுருமார், பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.

இந்நிலையில் எழுக தமிழ் பேரணிக்கு ஆதரவு தெரிவித்து உணவகங்கள், மருந்தகங்கள், எரிபொருள் நிலையங்கள், வாகன திருத்துமிடங்கள் தவிர்ந்த ஏனைய வர்த்தக நிலையங்கள் மற்றும் சந்தைகள், நிறுவனங்கள் என்பன மூடப்பட்டிருந்தன.

வமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோரது உரைகளுடன் எழுக தமிழ் பேரணி நிறைவடைந்துள்ளது.