Breaking News

போராட்டம் தொடரும் : சித்தார்த்தன்



தமிழ் மக்களுடைய அடிப்படை நியாயபூர்வமான உரிமைகளை வென்றெடுக்கும்வரை மக்களுடைய பேராதரவுடன் தொடர்கின்ற இந்தப் போராட்டம் ஒரு நியாயமான வெற்றியைக் கொடுக்கும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

ஏறக்குறைய 60 வருடங்களாக சாத்வீகத்தில் ஆயுதத்தில் போராடிவந்த நாங்கள் மீண்டும் மக்களுடைய பேராதரவுடன் தொடர்கின்ற இந்தப் போராட்டம் ஒரு நியாயமான வெற்றியைக் கொடுக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முற்றவெளியில் இன்று இடம்பெற்ற எழுக தமிழ் பேரணியில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்..

மக்களின் ஆதரவுடன் இடம்பெறும் போராட்டங்கள் மூலம் கிடைக்கும் வெற்றியின் ஊடாக உயிர்களைத் தியாகம் செய்த அனைத்தியக்க போராளிகளுக்கும் பொதுமக்களுக்கும் நாங்கள் அஞ்சலியை செலுத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், இன்று மக்களுடைய சரித்திரத்திலே ஒரு மிகப்பெரிய சாதனையென்று நிகழ்த்தப்பட்டிருக்கின்றது. 

தமிழ் மக்கள் ஒட்டுமொத்தமாக மிகப் பெரிய அளவிலே தங்களுடைய அடிப்படை உரிமைகளை என்றுமே விட்டுக்கொடுக்க மாட்டார்கள் என்பதை மிகத் தெளிவாக மிக உரத்த குரலிலே கூறியிருக்கின்றார்கள். 

எவ்வளவோ இன்னல்களுக்கு மத்தியிலும் இங்கு கூடியிருக்கின்றார்கள் என்றால் நிச்சயமாக அவர்களுடைய குரல்கள், சர்வதேசத்திற்கும், ஐக்கிய நாடுகள் சபைக்கும், அரசாங்கத்திற்கும் மிகத் தெளிவாகக் கேட்கும் என கூறினார்.