ஏழாவது நாளாகவும் தொடர்கிறது கைதிகளின் உண்ணாவிரதம்
அநுராதபுரம் சிறைச்சாலையில் நீண்டகாலமாக சிறைவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் 21 பேரது உண்ணாவிரத போராட்டம் ஏழாவது நாளா இன்றும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
தமிழ் அரசியல் கைதிகள் 21 பேரும் கடந்த 21ஆம் திகதி தங்களது உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு நீண்டகாலமாக தாம் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், தமிழ் அரசியல் கைதிகள் மீதான வழக்குகள் தமிழ் பிரதேசங்களில் உள்ள நீதிமன்றங்களுக்கு மாற்றப்பட வேண்டும் என வலியுறுத்தியும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை அநுராதபுரம் சிறைச்சாலையில் இன்று செவ்வாய்க்கிழமை விஜயம் மேற்கொள்ளவுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய இயக்கத்தின் செயற்பாட்டாளர் அருட்தந்தை சத்திவேல், குறித்த கைதிகளை சந்திக்கவுள்ளார்.
தமிழ்க் கைதிகளின் உண்ணாவிரதம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் ஒருவாரம் கடக்கின்ற போதிலும் இதுவரை அரசாங்கத்திடம் இருந்து பதில் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.