Breaking News

விக்னேஸ்வரனின் கோரிக்கைகள் நியாயமானவை..!!



வடக்கில் நடத்தப்பட்ட எழுக தமிழ் பேரணியின்போது முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் மற்றும் வடக்கு முதல்வரின் கோரிக்கைள் அனைத்தும் நியாயமானவையென்றும் இவற்றிற்கு வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் வாழும் தமிழ் மக்கள் எத்தகைய வேறுபாடுகளும் இன்றி பூரண ஆதரவை வழங்க வேண்டுமென்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இ.தொ.கவின் ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்விடயத்தை தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, யுத்தம் நிறைவடைந்த பின்னரும் வடக்கில் இராணுவ முகாம்களை தொடர்ந்தும் வைத்திருப்பதால் மக்கள் வாழ்விடம் யுத்த பூமியாகவே காட்சியளிக்கின்றதென குறிப்பிட்டுள்ள செந்தில் தொண்டமான், இவற்றை அகற்றுமாறு கூறுவது தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கை என்றும் இதனையே வடக்கு முதல்வரும் முன்வைத்துள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை தமிழின அடையாளத்தை காக்க வேண்டுமென வலியுறுத்தியும், தமிழ் மக்களின் உரிமைகளையும், கரிசனைகளையும், கவலைகளையும், எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் உலகறியச் செய்யும் நோக்கிலேயே எழுக தமிழ் பேரணி நடத்தப்பட்டதென சுட்டிக்காட்டியுள்ளதோடு, இதனை பெரும்பான்மையின பேரினவாதிகள் இனவாத கண்ணோட்டத்தில் நோக்கி தவறான கருத்துக்களை பரப்பி வருகின்றமை பிழையான விடயமென செந்தில் தொண்டமான் மேலும் தெரிவித்துள்ளார்.