Breaking News

"எழுக தமிழ்" ஒரு வரலாற்றுப் பதிவு!

கடந்த 24ஆம் திகதி சனிக்கிழமை தமிழ் மக்கள் பேரவை ஏற்பாட்டில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்குகொண்டு மிகவும் எழுச்சியுடன் நடைபெற்ற எழுக தமிழ் பேரணி எமது வரலாற்றின் ஒரு பதிவாக அமைந்துள்ளது.


வரலாற்றுப்புகழ் மிக்க நல்லூர் முற்றத்தில், மீண்டும் ஒரு முறை, அதுவும் 2009 இன அழிப்பின் பின் மக்கள் அலைகடல் என இந்நாட்களில் பெரு மக்கள் வெள்ளமாக குவிந்தது, ஒரு வரலாற்றுப் பதிவு என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. மேலும், வரலாற்றுப்புகழ்மிக்க யாழ். கோட்டைச் சூழலில், மக்கள் வெள்ளம் கூடி தமிழரின் பிரகடனத்தை உரக்கக்கூறி வெளியிட, வடக்கின் முதல்வரும், தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவருமாகிய கொளரவ சீ. வி விக்னேஸ்வரன் அவர்கள் தமிழரின் நிலைப்பாட்டை மிகவும் கம்பீரமாகவும், தெளிவாகவும் கூறியதனாது, தமிழர் நாம் எவ்வேளையிலும் எமது தியாகங்களை வீண்போக விடப்போவதில்லை என்ற செய்தியையும், எமது உரிமைகளை விட்டுக்கொடுக்கத்தயார் இல்லை என்ற செய்தியையும் மிகவும் தெளிவாக எடுத்துக்கூறி நிற்கின்றது.
இம்மாபெரும் எழுச்சிக்கு சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாது அலைகடலென திரண்டு வந்த மக்களின் உணர்வுகளுக்கு, தமிழ மக்கள் பேரவை சிரம் தாழ்த்தி வணங்குகின்றது. இப்போராட்டத்தில் மிகப்பெரும் பங்காற்றிய மதகுருமார்கள் அனைவரையும் முதற்கண் வணங்கி நிற்கின்றோம்.
மேலும், இப்பேரணிக்கு தமது முழு ஆதரவையும் வழங்கியது மட்டுமின்றி, பல வழிகளிலும் உதவிகள் புரிந்த யாழ். பல்கலைக்கழக மாணவர்கள், யாழ். பல்ககலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் யாழ். பல்கலைக்கழக ஊழியர்கள் அனைவரதும் எழுச்சி கண்டு இறும்பூதெய்திகிறோம்..
நேரடியாக பல அழுத்தங்கள் வந்த வேளையிலும், தாமாக முன்வந்து தமது வர்த்தக நிலையங்களை முற்றாக மூடி எழுச்சிப் பேரணியில் கலந்துகொண்ட எமதருமை வர்த்தகப் பெருமக்களின் உணர்வுமிக்க செயல், எங்கள் வரலாற்றில் மறக்கமுடியாத சம்பவமாகும். இதேபோல் தமது நாள் தொழிலை தியாகம் செய்து, தமது உணர்வுகளை வெளிக்காட்டி, பேரணியில் பங்குகொண்ட கடற்தொழிலாளர்கள், விவசாயிகள், மற்றும் ஏனைய நாள் தொழில் செய்பவர்களையும், மற்றும் பலவித உத்தியோகத்தர்கள், தனி நபர்கள், மகளீர் அமைப்புக்கள், கழகங்கள், பலவிதமான பொது அமைப்புக்கள் என அனைவரதும் எழுச்சி கண்டு தமிழ் மக்கள் பேரவை பெருமை அடைகின்றது. மேலும், இப்பேரணிக்கு பல இடர்கள் மத்தியிலும் போக்குவரத்து வசதிகள் மேற்கொண்ட போக்குவரத்துச் சங்கங்கள் அனைத்தினதும் இனப்பற்றை நன்றி உணர்வோடு தமிழ் மக்கள் பேரவை நோக்குகின்றது.
ஒரு சில ஊடகங்கள் குழப்பகரமான செய்திகளை வெளியிட்டு இப்பேரணியை குழப்பும் முழு முயற்சியில் இறங்கிய போதும், மக்கள் அவ் ஊடகங்களை இனங்கண்டு, அப்பொய்ப்பிரச்சாரங்களையெல்லாம் புறக்கணித்து, இவ் அகிம்சைப் போராட்டத்தில் அலைகடலென திரண்டெழந்த எழுச்சியானது ஒரு தீர்க்கமான செய்தியை சொல்லி நிற்கின்றது.
அதேவேளை, இப்பேரணியின் வெற்றிக்கு அயராது உழைத்த தேசியப்பற்றுள்ள ஊடகங்களையும், ஊடகவியலாளர்களையும் நாம் என்றும் தலை வணங்கி நிற்பதுடன் அவர்களின் தேசப்பற்று எமது எதிர்கால செயற்திட்டங்களுக்கு வலுச்சேர்க்கும் என்பதில் எந்த மாற்றுக்கருத்துக்குமிடமில்லை என்பதயும் பதிவாக்கிக்கொள்கின்றோம்.

இதேபோல், அரசியல் சுய லாபம் கருதிய ஒரு சில சக்திகள் பேரணியை குழப்புவதற்காக பல வழிகளிலும் முயன்றபோதும், அவற்றை எல்லாம் உதாசீனம் செய்து, தடைகளையெல்லாம் கடந்து வந்து, தமது எழுக தமிழ் கோஷம் வானதிர முழங்கிய எம் தமிழ் உள்ளங்களையும், அவர்களின் தேசப்பற்று மற்றும் தமிழ் பற்றையும் பார்க்கும் போது, எம்தேசத்தில் எத்தகைய இடர்கள் வரினும், இம்மண் ஒருபோதும் தியாகங்களை மறந்து அடங்கிப் போய் தமது உரிமைகளை கைவிடாது என்ற செய்தியை மிகத்தெளிவாக சொல்லி நிற்கின்றது.
நன்றி.
தமிழ் மக்கள் பேரவை