Breaking News

இலங்கை மக்களின் நன்மைக்காக ஒத்துழைப்பு வழங்க தயார்



சிங்கப்பூரில் இடம்பெறுகின்ற இந்து சமுத்திர மாநாட்டிற்கு சென்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான, அமெரிக்க வெளியுறவுத் துறை துணை வெளிவிவகாரச் செயலர் நிஷா பிஸ்வாலை சந்தித்துப் பேசியுள்ளார்.

இதன்போது, தற்போதைய அரசியல் நிலமை, பொருளாதார மற்றும் சமூக நிலைப்பாடுகள் சம்பந்தமாக பேசப்பட்டதாக பிரதமர் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது.

கண்டி – கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை பொரளாதார வலயத்தின் அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலையை அண்மித்த அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்தும் இங்கு பேசப்பட்டுள்ளது.

அத்துடன் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மக்களின் வாழ்க்கையை சுமுக நிலைக்கு கொண்டு வருவதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நீண்ட கால மற்றும் நிலையான வளர்ச்சி திட்டங்கள் குறித்தும் இருவருக்குமிடையில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதேவேளை இலங்கையில் தற்போதுள்ள இணக்க அரசின் நல்லாட்சிக்கு நிஷா பிஸ்வால் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார். அத்துடன் இலங்கை மக்களின் சிறப்பு மற்றும் நன்மைக்காக ஒத்துழைப்பு வழங்குவதற்கு தயாராக இருப்பதாக மெரிக்க வெளியுறவுத் துறை துணை வெளிவிவகாரச் செயலர் நிஷா பிஸ்வால் கூறினார் என்று பிரதமர் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது.