ஒடிசாவில் பஸ் கவிழ்ந்து கல்லூரி மாணவிகள் உள்பட 21 பேர் பலி
ஒடிசாவில் பயணிகள் பஸ் பாலத்தில் இருந்து 50 அடி கீழே பாய்ந்தது. இந்த விபத்தில் கல்லூரி மாணவிகள், பெண்கள் உள்பட 21 பேர் பலியாயினர்.
ஒடிசா மாநிலம் பவுத் நகரில் இருந்து ஆங்குல் மாவட்டத்தின் அத்தாமாலிக் என்ற நகருக்கு நேற்று காலை 10 மணி அளவில் பயணிகள் பஸ் சென்று கொண்டிருந்தது. அதில் கல்லூரி மாணவிகள், பெண்கள் என 60-க்கும் மேற்பட்டோர் பயணிகள் இருந்தனர்.
அந்த பஸ் புருனா மந்த்ரா என்னும் இடம் அருகே ஒரு பாலத்தின் மீது சென்றபோது எதிரே ஒருவர் சைக்கிளில் வந்தார். அவர் மீது மோதிவிடாமல் இருக்க பஸ்சை டிரைவர் திருப்ப முயன்றார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த பஸ், திடீரென பாலத்தின் பக்கவாட்டுச் சுவரை இடித்துவிட்டு கீழ்நோக்கி வேகமாக பாய்ந்தது.
பாலத்தில் இருந்து 50 அடி கீழே உள்ள பாறையின் மீது மோதிய அந்த பஸ் பலத்த சேதம் அடைந்தது. இந்த பயங்கர விபத்தில் சம்பவ இடத்திலேயே 14 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த 37 பேர் ஆங்குல் மாவட்ட நிர்வாகம் மூலம் உடனடியாக மீட்கப்பட்டு ஆங்குல், அத்தாமாலிக் மற்றும் கட்டாக் நகர மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி மேலும் 7 பேர் இறந்தனர். படுகாயம் அடைந்தவர்களில் 15 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
பஸ்விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த மாநில முதல்-மந்திரி நவீன் பட்நாயக், தலா ரூ.2 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.
பிரதமர் மோடியும் பஸ்விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து இருக்கிறார்.