Breaking News

பேராறு திட்ட காணிக்கு மாற்றுக் காணி தாருங்கள் : கவனயீர்ப்பு போராட்டம்



பேராறு திட்டத்தில் சுவீகரிக்கப்பட்ட காணிக்கு மாற்றுக்காணி தாருங்கள் என தெரிவித்து, வவுனியா – சாஸ்திரி கூளாங்குளம், பண்டார பெரியகுளம் விவசாயிகள் கவனயீர்ப்பு ஊர்வலமொன்றை மேற்கொண்டுள்ளனர்.

பண்டார பெரிய குளத்தின் கீழ் செய்கை பண்ணப்பட்ட வயல் காணிகளுக்கு உறுதியளிக்கப்பட்டவாறு இதுவரை மாற்றுக் காணிகள் தரப்படவில்லை என தெரிவித்தே, விவசாயிகள் இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வவுனியா பிரதேச செயலகத்திற்கு முன்பாக இருந்து மாவட்ட செயலகம் வரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் ஊர்வலமாக சென்றிருந்தனர்.

ஊர்வலமாக சென்ற விவசாயிகள், வவுனியா அரசாங்க அதிபரிடம் தமது கோரிக்கைகள் அடங்கிய மனுவொன்றையும் கையளித்தனர்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் நகருக்கான நீர்வழங்கல் திட்டமொன்று 2007 ஆம் ஆண்டளவில் நீர்வழங்கல் சபையால் முன்னெடுக்கப்பட்டிருந்தது. 

அதற்காக பேராறு ஆற்றுக்கு குறுக்கே நீர்த்தேக்கம் அமைக்கப்பட்டு நீர் வழங்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாக இருந்தது. இந்தத் திட்டத்திற்காக 65 குடும்பங்களுக்கு சொந்தமான 167 ஏக்கர் வயல் காணிகள் சுவிகரிக்கப்பட்டது.

இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததன் அடிப்படையில் விவசாயிகளினால் முற்தரப்பு ஒப்பந்தமொன்று மேற்கொள்ளப்பட்டது.

அதன் அடிப்படையில் நிபந்தனையுடன் விவசாயிகள் காணிகளை விட்டுக்கொடுத்திருந்ததுடன், சுவீகரிப்பட்ட காணிகளின் தரத்துக்கு ஏற்றவாறு காணிகளை ஒரு வருடத்திற்குள் காடுகள் அழிக்கப்பட்டு புதிய இடத்தில் வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டிருந்தது.

எனினும், மூன்று வருடங்கள் கடந்த நிலையிலும் 14 குடும்பங்களுக்கு 37 ஏக்கர் வயல் நிலங்கள் மாத்திரமே கடந்த மாதம் வழங்கப்பட்டுள்ளது.

அதுவும் சுவீகரிக்கப்பட்ட வயல்களுக்கு சமமான தரத்தில் இல்லை எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

இதேவேளை, அண்மையில் விவசாயிகளுக்கு சிறு தொகைப் பணத்தை வழங்கி வயல்களை துப்பரவு செய்து எடுக்குமாறு கூறப்பட்டுள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள் தெரிவித்திருந்தனர்.